8 ஆகஸ்ட், 2010

அபிவிருத்தி என்ற போர்வையில் மற்றொரு முள்ளிவாய்க்கால் போர் திணிக்கப்படுவதாகவே தமிழர்கள் கருதுகின்றனர்


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெற்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது. பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மனிதாபிமானத்துக்கான போரின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு முழு நாடும் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் முள்ளிவாய்க்கால் போர் போன்று முழு வீச்சில் ஒட்டுமொத்த தமிழினத்தின் இருப்பும் பாரம்பரிய நிலமும் கலை கலாசாரங்களும் கபளீகரம் செய்யப்படுவதாக தமிழ் மக்கள் மிக ஆழமாக உணரத் தொடங்கி விட்டனர் என்று பேராசிரியரும் யாழ்.சிந்தனைக் கூடத்தின் அமைப்பாளருமான இரா.சிவச்சந்திரன் கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இச் செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் பயங்கரவாத கால கட்டத்தில் தமிழ் மக்கள் வாய் மூடி மௌனிகளாக்கப்பட்டனர். சுதந்திரம் இழந்திருந்தனர்.

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாதிருந்தனர் என்றே தென்னிலங்கை கூறுகின்றது .

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட வழி சமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்துள்ளது. தமிழ் மக்கள் தமது மௌன விரதத்தைக் கலைக்கவும் வழி பிறந்துள்ளது என்றும் தென்னிலங்கை கூறுகின்றது. இப்போது போர் முடிந்து ஒருவருடம் கழிந்து விட்டது. முள்ளிவாய்க்கால் போரும், மனிதாபிமானத்துக்கான போரும் அவை நடத்தப்பட்டதற்கான இலக்கை எட்டி விட்டனவா? என்ற கேள்வியை வட பகுதி மக்களிடம் கேட்பீர்களாக இருந்தால் அவர்கள் இல்லை என்றே பதில் கூறுவார்கள் என்று தெரிவித்த அவரிடம் கேள்விகளைத் தொடுத்தபோது,

கேள்வி: போர் முற்றுப்பெற்றுவிட்டது. போருக்குப் பிந்திய நிலையை தமிழ் மக்கள் குறிப்பாக யாழ்.குடா நாட்டு மக்கள் எவ்வாறு நோக்குகின்றனர்? மக்கள் எத்தகைய மன நிலையில் உள்ளனர்?

பதில்: மனிதாபிமானத்துக்கான போரின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று கூறப்பட்ட போதும் அவர்கள் முழுமையாகப் பீதிக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று கூறுவது தான் பொருந்தும். அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக இன்னும் ஒரு முள்ளிவாய்க்கால் போர் அபிவிருத்தி என்ற போர்வையிலும் உல்லாசப் பயணிகள் என்றபோர்வையிலும் அரங்கேறி வருகின்றது.

கேள்வி: வடபகுதியில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. போரின் காரணமாக வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதை வடக்கு, கிழக்கு பகுதி மக்கள் உணரவில்லையா?

பதில்: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி பற்றி இப்பகுதி மக்களை அரசாங்கம் கலந்தாலோசித்ததா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே வரும். அபிவிருத்தி என்பது எமது பிரதேசத்திற்குரிய அபிவிருத்தியாக இருக்க வேண்டும். மக்களின் கருத்துகள் கேட்கப்படவேண்டும்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அபிவிருத்தி செய்யப் போவதாக கூறுகிறார்கள். இங்கிருக்கும் வளங்கள் இங்குள்ள மக்களுக்கே போதாமல் இருக்கும் போது பல்தேசிய கம்பனிகள் மூலம் உலகத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு முயன்றால் வட பகுதியிலுள்ள சுண்ணாம்புக் கற்பாறைகள் தோண்டப்பட்டு சுண்ணாம்புக் கல் இருப்பு விரைவில் தீர்ந்து விடும்.

அது மாத்திரமல்ல யாழ். குடாநாட்டில் சுண்ணாம்புக் கல் அகழ்வதை தீவிரப்படுத்தினால் கடல் உட்புகும் அபாயமும் உள்ளது. கடந்த 30 வருடங்களாக போர் நடைபெற்றது. காங்கேசன்துறை தொழிற்சாலை செயலிழந்து கிடப்பதாக கூறப்பட்டது.ஆனால் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு அப்பகுதிகளிலுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளில் சுண்ணாம்புக்கல் அகழ்வு கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அது தற்போதே தெரியவந்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் மிக ஆழமாக தோண்டப்பட்டு சுண்ணாம்புக்கல் அகழப்பட்டுள்ளன. சில இடங்களில் 50 அடி ஆழத்திலும் தோண்டப்பட்டு சுண்ணாம்புக்கல் அகழப்பட்டுள்ளன.

வட பகுதி கரையோரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 அடி உயரத்திலேயே உள்ளது. இவ்வாறான நிலையில் 50 அடி ஆழத்தில் சுண்ணாம்புக்கல் அகழப்படுமாக இருந்தால் கடல் நீர் உட்புகுவது மாத்திரமல்ல வட பகுதியில் உள்ள தரைக்கீழ் நீரும் உப்பாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே இத்தகைய அபிவிருத்தியை பல்தேசியக் கம்பனிகளும் செய்யுமாயின் பாரதூரமான விளைவையே கொண்டுவரும்.

வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. கட்டடங்கள் இடிக்கப்படவுள்ளன. ஆனால் இது பற்றி எந்தவிதமான ஆலோசனையும் வடபகுதி மக்களிடம் கேட்கப்படவில்லை. காணிகளைச் சுவீகரிக்காமலும் கட்டடங்களை இடிக்காமலும் மாற்றுத்திட்டம் பற்றி யோசிக்கலாம். மாற்றுத்திட்டம் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு நிறையவே வழிவகைகள் உள்ளன.

எவ்வித இடர்களையும் மக்களுக்கு ஏற்படுத்தாமல் இலகுவாக யாழ்.குடாநாட்டில் பெருந்தெருக்களை அமைக்க முடியும். ஆனால், இதுபற்றி எவரிடமும் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்கப்படவில்லை.

பண்ணையில் அமைந்துள்ள கண்ணாபத்தை பறவைகள் சரணாலயம் பாதுகாப்பு கருதி முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டது. வடபகுதிக்கே உரிய மீன்வளம் முற்றாக சூறையாடும் அபாயம் உள்ளது.

மொத்தத்தில் போருக்குப் பிந்திய நிலையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சூழல், வளங்கள் கலாசார விழுமியங்கள் என்பன சூறையாடப்படுவதாகவே வட பகுதி மக்கள் கருதுகின்றனர்.

வடபகுதி அபிவிருத்தி என்பது அந்த மண்ணுக்குரிய வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். கொழும்பின் நலன்களுக்கேற்ப செய்யப்படக் கூடாது.

எனவே அரசாங்கமோ அல்லது வேறு எவருமோ கூறுகின்ற அபிவிருத்தி என்பது தமிழர்களுக்கு நன்மை அளிக்கப்போவதில்லை என்ற கருத்து தமிழ் மக்களிடையே நிலவுகின்றது. போருக்குப் பிந்திய சூழ்நிலையில் வடபகுதியில் அமைக்கப்படவுள்ள இராணுவ முகாம்கள் பற்றி மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இராணுவ முகாம்களும் குடியேற்றங்களும் தம்மை தமது பாரம்பரிய மண்ணில் சிறுபான்மையினராக ஆக்கி சிதறடித்துவிடும் என்ற அச்சமும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

மொத்தத்தில் வட பகுதி மக்கள் மௌனிகளாக இருப்பதும், அமைதியாக இருப்பதும் என்பது அரசாங்கம் கூறுகின்ற அபிவிருத்தியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் அல்லது அங்கீகரித்துள்ளார்கள் என்பது அர்த்தம் அல்ல. சுதந்திரமாக கருத்துக்களை கூற முடியாத நிலையிலேயே அவர்கள் மௌனமாக இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக