10 ஜூலை, 2010

தமிழர்கள் பொலிஸில் பதிய உத்தரவு

தமிழர் முன்னர் பதிவு செய்யப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம்(ஆவணப்படம்)


தமிழர் முன்னர் பதிவு செய்யப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம்(ஆவணப்படம்)
இலங்கையின் தலைநகர் கொழும்பின் சில பகுதிகளில் தமிழர்கள் மீண்டும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது நடைமுறையில் இருந்த இந்த பதிவுமுறை மீண்டும் அமலுக்கு வந்திருப்பது குறித்து அங்கிருக்ககின்ற பலர் பெரும் விசனம் தெரிவித்துள்ளனர். பலர் பெரும் பீதியும் குழப்பமும் அடைந்ததாகவும் கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.

இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாண சபை உறுப்பினரான குமரகுருபரன் அவர்களும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் சென்று முறையிட்டுள்ளனர்.

ஏற்கனவே சிவில் நிர்வாகத்திடம் அங்குள்ள மக்கள் குறித்த பதிவுகள் இருக்கும் போது பிறிதாக பொலிஸ் பதிவு ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் குமரகுருபரன்.

ஆனால் இது ஒன்றும் புதிய விதி அல்ல என்றும் ஏற்கனவே இருக்கும் பொலிஸ் பிரமாணங்களின் அடிப்படையிலேயே தாம் இதனை செய்வதாகவும் பொலிஸ் தரப்புப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி கூறுகிறார்.

அத்துடன் இது அனைவருக்குமானது அல்ல என்றும் புதிதாக வருபவர்களே பதியப்படுவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்றும் இதற்காக நீதிபதியின் அனுமதியை பெற வேண்டிய அவசியம் தமக்கில்லை என்றும் அதற்கமைய அடையாளங்காணப்பட்ட சில இடங்களில் மாத்திரம் தாம் இந்த நடைமுறையை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், அவசரகாலச் சட்டம் தற்போது அமலில் உள்ளதால், பொலிஸ் பிரமாணம் அமலில் அற்ற நிலையை அடைந்துள்ளதாக கூறும் குமரகுருபரன் தற்போதுள்ள அவசரகாலச் சட்டத்தில் பொதுமக்கள் பதிவு செய்வதற்கு அனுமதிக்கும் விதிகள் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கைக்கு தாம் தயாராகி வருவதாகவும் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக