9 ஜூன், 2010

இலங்கை ஜனாதிபதி - தமிழக எம்பிக்கள் இன்று சந்திப்பு

டில்லி சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று மாலை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கின்றனர். இதன்போது போரினால் இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்துவர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ராஜபக்ஷ மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இலங்கை பிரச்சினை குறித்து முக்கிய தலைவர்களைச் சந்தித்து அவர் பேசுவார்.

கடந்த 6ஆம் திகதி முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கும் வகையில், அவர்களைச் சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ராஜபக்ஷவிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.

மேலும் இதுதொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டில்லி சென்று, ராஜபக்ஷவை நேரில் சந்தித்து வலியுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு அவர் உத்தரவிட்டார்.

முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்த டி.ஆர்.பாலு, நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, ராஜபக்ஷவிடம் இலங்கை தமிழர்களை விரைவில் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்த வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் முதல்வர் கருணாநிதி உத்தரவுபடி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கவிஞர் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், இ.ஜி.சுகவனம், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், ஆர்.செந்தாமரைச் செல்வன், ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஆர்.ஜெயதுரை, ஏ.ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டாலின், மணிசங்கர் அய்யர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், மாணித்தாகூர், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், ஞானதேசிகன் ஆகியோர் இலங்கை அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை தீர்க்குமாறு வலியுறுத்துவர் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக