9 ஜூன், 2010

அவசரகாலச் சட்டம் மக்களை அடக்குவதற்கே பயன்படுகிறது-சரத் பொன்சேகா

பயங்கரவாதம் யுத்தம் இல்லாத நிலையில் பொது மக்களை அடக்கி ஒடுக்குவதற்கே அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுவது நாட்டிற்கு பெரும் ஆபத்தானதாகும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா சபையில் கூறினார்.

சாதாரண சட்டம் அமுலில் இன்மையால் நீதிபதிகள் மட்டுமின்றி நீதிமன்றங்களும் அஞ்சுகின்றன. சட்டத்தை கையிலெடுத்து மக்கள் பிரதிநிதியை தூக்கிலிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முயற்சிக்கின்றார் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

யுத்தம் இல்லாத நிலையில் அவசரகாலச் சட்டம் தேவையில்லை. அரச பயங்கரவாதத்தினால் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். அறிஞர்களும், மதத் தலைவர்களும் அஞ்சுகின்றனர். விஹாரைகளுக்கு கல் வீசப்படுகின்றன.அவசரகாலச் சட்டத்தை முன்னெடுப்பதற்காக சாதாரண பொதுச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டதன் பின்னர் ஒரு மாதத்திற்கு கைது செய்யப்பட்டவராக நான் மட்டுமே இருக்க முடியும். நீதிபதிகளும் அஞ்சுகின்றனர். பெண் நீதிபதிகளும் அச்சுறுத்தப்படுகின்றனர். எனக்கெதிரான வழக்கை விசாரித்த நீதிபதியை இடமாற்றுவதற்கு முயற்சித்தனர். எனினும் எதிர்ப்பினால் ஒரு மாதத்திற்கு இடமாற்றம் இடை நிறுத்தி வைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல் நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டிற்குள் அமைச்சர்களும் ஆளுந்தரப்பினரும் ஜனநாயக கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின்பேக்ஷிது படுகொலைகளும் தாக்குதல்களும் இடம்பெற்றன. ஜே.வி.பி., ஐ.தே.க. வினரும் தாக்கப்பட்டனர். பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கு என்ன நடக்கின்றது. புனர்வாழ்வளிக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? முகாம்களுக்கு வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டனவா? இவையெல்லாவற்றையும் செய்யாவிடின் அவர்களை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் தள்ளிவிடும் செயற்பாடாகவே அமையும்.சட்டத்திற்கு சகலரும் சமமானவர்கள் என அமைச்சர் பீரிஸ் அமெரிக்காவில் கூறியிருப்பதும் என்னைப் பற்றி கூறியிருப்பதும் கவலைக்குரியதாகும்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன. திணைக்களம் மக்களின் நலனுக்காக அன்றி அரசாங்கத்தின் நலனை காப்பதற்காக முயற்சிக்கின்றது. இராணுவத்திலிருந்து வெளியேறிய பலர் வேலையின்றி இருக்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்திற்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டுமே தவிர ""பொம்மையாக இருக்க முடியாது'' இருக்கவும் கூடாது. பயங்கரவாத தடைச் சட்டத்தில் தற்காலிக ஏற்பாடுகள் இருக்கின்றன. அதில் கூட்டுப் பொறுப்பு முக்கியமானதாகும். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் என்னை கைது செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுக்கான தீர்மானம் பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே எடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் முறைகேடாகவே இடம்பெற்றது என்பதை உயரிய சபையில் உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இதன்போது ஆளும் தரப்பினர் கூச்சல் குழப்பமிட்டு கூற்றை நீக்குவதை விட வாபஸ்பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி நின்றனர். இடைஞ்சலுக்கு மத்தியில் சரத் எம்.பி. தொடர்ந்து உரையாற்றும்போது எனக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் என்னை தூக்கிலிடுவதற்கு முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியிருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினரை தூக்கிலிடுவதற்கு முயற்சிக்கின்றார். நாட்டின் சட்டத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கையிலெடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அமைச்சுக்கு சொந்தமானவர் அல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். யுத்த வெற்றிக்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் எதனையுமே செய்யவில்லை என்பதனை இயற்கையும் நிரூபித்துவிட்டது.படையணியில் கலந்து கொள்ளவிருந்த வீரர் ஒருவர் இடி தாக்கத்திற்கு இலக்காகி பலியாகியுள்ளார். இது முதற்தடவையாகும் என்பதுடன் பாராளுமன்றத்தில் ஒழுக்கத்தை நிலை நாட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக