9 ஜூன், 2010

ஐ.நா. செயலாளர் மூன் மௌனம் : மனித உரிமை அமைப்புக்கள் விசனம்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்களில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மற்றும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரதம அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரின் பங்களிப்பு பற்றி சர்வதேச நெருக்கடிகள் குழுவும் ஏனைய அமைப்புக்களும் கேள்வி எழுப்பியுள்ளன.

இப்பொழுது, நாட்டில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து எந்தவித சுயாதீன விசாரணைக்குழு முன்னிலையிலும் ஜெனரல் சரத் பொன்சேகா சாட்சியமளிக்க துணிந்தாரேயானால் அவரைத் தூக்கிலிடப் போவதாக ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அச்சுறுத்தியிருந்தார்.

ஆனால் பான் கீ மூனும் அவரது அலுவலகமும், கோத்தபாய ஜூன் மாதம் 7ஆம் திகதி விடுத்த இந்த அச்சுறுத்தலை அறிந்து கொண்டும் அது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருக்கின்றனர்.

வரலாற்றை அடிப்படையாக வைத்து, மனித உரிமை பேணல் அமைப்புக்கள், இலங்கை அரசாங்கத்தின் சுய விசாரணை நம்பகமற்றது என்ற முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக ஆலோசனை பெறுவதற்கு நிபுணர்கள் குழுவை நியமிக்கப் போவதாக தெரிவித்து 3 மாதங்களாகியும் தயக்கம் காண்பித்து வரும் செயலாளர்நாயகத்திற்கு தற்போது சாட்சிகள் மீதான கோத்தபாயவின் கொலை அச்சுறுத்தல் திருப்தி அளிக்குமா என்று இன்னர் சிற்றி பிறெஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

கொலை அச்சுறுத்தல் பற்றி ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் அறிந்தள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ள செயலாளர் நாயகம் மூனின் துணை பேச்சாளர் பர்ஹான் ஹான், நிபுணர்கள் குழுவின் அங்கத்தவர்கள் செயல்படும் விதிமுறைகளைத் தயாரிப்பதிலேயே தாமதம் ஏற்படுவதாக பதிலளித்துள்ளார்.

இது புதுமையாக இருக்கிறது. உதாரணமாக, இஸ்ரேல், காசா நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரண உதவிப் படகுகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு வாரம்கூட ஆவதற்குள் அந்தச் சம்பவம் தொடர்பாக நிபுணர்கள் குழுவை நியமிப்பதற்கு செயலாளர் நாயகம் இஸ்ரேலுடனும் துருக்கி பிரதமருடனும் விதிமுறைகள் பற்றி பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்துள்ளார் என்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பான் கீமூன் வக்காலத்து வாங்குவதும் அவரது அதீதமான மந்தகதியும் ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்களில் கொண்டுள்ள பங்களிப்பை எடுத்துக் காட்டுகின்றனவா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக