9 ஜூன், 2010

ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவும் இணக்கம்;செய்தியாளர் மாநாட்டில் இரா.சம்பந்தன்








தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை யில் ஈடுபடவும், இணைந்து செயற்படவும் ஜனாதிபதி யுடனான சந்திப்பில் இணக்கம் கண்டுள்ளதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் அடுத்த கட்டப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம், இடம்பெயர்ந்து மீள்குடியேறும் மக்களுக்கு இன்னும் பணிகளை ஆற்ற முடியுமென்றும் அதற்காக உலக நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொடுக்கத் தயாரென்றும் கூறிய சம்பந்தன் எம்.பி. அதற்காக சர்வதேச நாடுகளுக்கு நேரடியாகச் சென்று கோரிக்கை விடுக்கவும் தயார் எனத் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற குழு அறையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அண்மையில் வன்னிக்கு விஜயம் செய்து, 28 கிராமங்களில் மீள்குடியேறிய மக்களின் நிலவரங்களைக் கூட்டமைப்பினர் நேரில் அவதானித்து ஆராயந்துள்ளனர். இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையொன்றை நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த சம்பந்தன் எம்.பி. செய்தியாளர் மாநாட்டிலும் அதனை வெளியிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் அரசாங்கத்திற்குத் தார்மீக ரீதியாகவும் சட்டரீதியாகவும் கடப்பாடு உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர் வடக்கில் தமது விஜயத்தின்போது நேரில் தெரிந்து கொண்ட குறைபாடுகளை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பினர் அண்மையில் ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பு தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. சந்திப்பைத் தொடர இணக்கம் கண்டிருப்பதாகவும் கூட்டமாக அல்லாமல் சிறிய சிறிய குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தையைத் தொடரவுள்ளதாகவும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதை இருதரப்பும் ஏற்றுக் கொண்டதாகக் கூறிய சம்பந்தன் எம்.பி, “ஜனாதிபதியை நாம் சந்திக்கச் சென்ற போது, புலிப் பயங்கரவாதிகள் கேட்டதை என்னிடம் கேட்காதீர்கள் என்றார். நாம் அதனைக் கேட்க வரவில்லை என்று கூறினேன். நாம் அரசாங்கத்தைக் குறைகூறவில்லை. அரசாங்கம் மக்களுக்குப் பணியாற்றி இருக்கிறது. இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது.

கடந்த காலங்களில் அரசுடன் இணைந்து பணியாற்றும் சூழல் ஏற்படவில்லை. அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தவில்லை என்று கூறுவது தவறு. அழைத்த அத்தனைப் பேச்சுவார்த்தைக்கும் சென்றிருக்கிறோம். இனி மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் இணைந்து செயற்படுவோம்” என்றும் தெரிவித்தார்.

“உதவி வழங்கும் நாடுகளுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?” என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த சம்பந்தன், ‘இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். சொந்தத் தொழிலுடன் சுகபோகமாக வாழ்ந்த மக்கள் இன்று வெறுங்கையுடன் நிற்கிறார்கள். அவர்களை மீளவும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வருவதற்குப் பெருந்தொகைப் பணம் அவசியமாகிறது.

எனவே, உதவியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நிதியைப் பெற்றுக் கொடுக்கும் அதேநேரம் அது உரிய முறையில் செலவிடப்படுகிறதா என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத் தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக