9 ஜூன், 2010

இடம்பெயர்ந்தோருக்கென 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கு இந்தியா நிதியுதவி ஜனாதிபதி மஹிந்த - மன்மோகன் சந்திப்பில் இணக்கம்




இந்தியாவும் இலங்கையும் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கைத்தொழில் ஆகிய துறைகளில் பரந்துபட்ட ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கான இணக்கத்தை வெளிப்படுத்தின. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதுடில்லி விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உடனான சந்திப்பின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அனைத்து மக்களுக்கும் சமாதானம், சகோதரத்துவம், கெளரவம், சம உரிமையுடன், ஜனநாயக மற்றும் மனித உரிமையுடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை தமது அரசின் எதிர்ப்பார்ப்பு என்று கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த நோக்கங்களை அரசியலமைப்பில் அவற்றை குறிக்கும் ஷரத்துக்களின் மூலம் நிறைவேற்று அவர் இணக்கம் தெரிவித்தார்.

இதனை பெரிதும் வரவேற்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சமாதானத்துக்கும் அமைதிக்கும் இலங்கை எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துக்களை இரு தலைவர்களும் பரிமாறிக் கொண்டனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கு நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்தது. அதே போன்று வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் ஒழிந்து போன உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைத்துத் தரவும், புதிய நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகளை நிர்மாணித்துத் தரவும், தொழிற்பயிற்சி நிலையமொன்றை அமைக்கும் நடவடிக்கைக்கு உதவி வழங்கவும் இந்திய இணக்கம் தெரிவித்தது.

இரு தரப்பு பொருளாதார உறவுகளை மேலும் விஸ்தரித்துக் கொள்வது தொடர்பான இணக்கம் முன்னுரிமை பெற்றது. இதற்காக இருநாடுகளும் இணை ஆணைக் குழு ஒன்றை வெளியுறவு அமைச்சு மட்டத்தில் இந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவதென இணக்கம் காணப்பட்டது.

இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றி குறிப்பிட்ட இரு தலைவர்களும் இரு தரப்பு பொருளாதார கூட்டுறவை விஸ்தரிப்பது தொடர்பாக நிலையான வியூகமொன்றை அமைப்பதற்கு இரு நாடுகளினதும் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

இலங்கை படையினருக்கு பயிற்சி வழங்குவதற்கும் இராணுவ பிரதிநிதிகளை பரிமாறிக் கொள்வதற்கும் இரு நாடுகளுக்கிடையிலும் பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பாக செயலமர்வுகளை நடத்தவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்தன. அத்துடன் அண்மையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பொலிஸாருக்கு இந்திய நிறுவனங்களில் பயிற்சி வழங்குவதற்கும் இணங்கப்பட்டது.

கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையிலும் தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் வரையிலும் பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பதன் அவசியத்தை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டதுடன் அதனை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தனர்.

இந்திய கவுன்ஸில் அலுவலகங்களை யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் திறப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது. புதுடில்லி, சென்னை மற்றும் மும்பாயில் உள்ள அலுவலகங்களுக்கு புறம்பாக மற்றொரு அலுவலகம் அமைப்பதற்கான இலங்கையின் விருப்பத்துக்கு இந்தியப் பிரதமர் சாதகமான அறிகுறியைக் காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக