31 மே, 2010

அரசின் நடவடிக்கை வெளிப்படையாக அமைய வேண்டும் : ததேகூ

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் பரிணமித்துள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறக்கணித்து விட்டு தீர்வுகள் முன்வைக்கப்படுமாயின் அது நியாயத் தன்மையுடையதாக அமையாது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் எடுக்கப்படுகின்ற தன்னிச்சையான தீர்மானங்களும் அது சார்ந்த திட்ட வரைபுகளும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

புதிய நாடாளுமன்றம் அமைந்ததன் பின்னர் தமிழர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அது இதுவரையில் நடைபெறாதிருப்பது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே செல்வம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"பல வருட காலமாக எதிர்நோக்கப்பட்டும் அரசாங்கங்களினால் இழுத்தடிக்கப்பட்டும் வருகின்ற தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு எனும் விடயம் ஒளிவு மறைவு கொண்டதாக அமையக் கூடாது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் முன்வைக்கப்படுகின்ற நியாயமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான தீர்வுகளைத் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இந்நாட்டில் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் மக்கள் செல்வாக்குப் பெற்ற அமைப்பாகவும் அது திகழ்கின்றது. இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமது பிரதிநிதித்துவக் கட்சியாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறானதோர் நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அணுகும் விடயத்தில் அரசாங்கம் முதலில் எம்மை அழைத்து எமது தரப்பு ஆலோசனைகளையும் உள்வாங்க வேண்டிய தேவை இருக்கின்றது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்மை ஒதுக்கித் தள்ளிவிடவோ அல்லது புறக்கணித்து விடவோ அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது.

இவ்வாறான புறக்கணிப்புகள், ஓரங்கட்டுதல்கள் ஆகியவையே தேசிய இனப் பிரச்சினை உருவாவதற்கும் அது இந்த அளவில் உச்சம் பெற்றிருப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளன. அரசாங்கத்திற்கு இவ்விடயத்தில் கடமையும் பொறுப்பும் இருக்க வேண்டும்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லவும் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் பகிரங்கமாக கூறி வந்தார். இதே நிலைப்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் தெரிவித்து வந்தார்.

ஆனால் இன்று அந்த அறிவிப்புகளும் நிலைப்பாடுகளும் தடம்புரண்ட நிலையில் காணப்படுவதாகவே இருக்கின்றது.

உறுதி மொழிகளும் நிலைப்பாடுகளும் தீர்வாக அமைந்து விடப்போவதில்லை என்பதையும் அதனை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதன் ஊடாகவே தீர்வுகளுக்கான வழி பிறக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் மனசாட்சியுடன் நடந்து கொள்ளவில்லை என்பது அதன் தற்கால நடவடிக்கைகள் எடுத்துக் காட்டி வருகின்றன.

இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பெதனையும் அரசாங்கம் விடுவிக்கவில்லை. அமைச்சர்கள் கூறுவதாகவே ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

அது மட்டுல்லாது தீர்வுத் திட்டம் தொடர்பிலான வரைபொன்றை அரசாங்கம் தயாரித்திருப்பதாகவும் அதனை இந்தியாவிடம் கையளிக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவின் தலையீடுகள், அழுத்தங்களை முழுமையாக ஆதரிக்கின்ற நாம் எமது மக்கள் தொடர்பிலான விடயங்களில் எமது ஆலோசனைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை விரும்புகிறோம்.

ஆகவேதான் எம்மை புறக்கணித்துவிட்டு எட்டப்படுகின்ற தீர்மானங்கள் நிறைவுடைத் தன்மை கொண்டதாக அமையாது என்பதையும் ஆரம்பத்திலேயே கூறி வைக்க விரும்புகிறோம்.

எமக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமே தவிர திணிக்கப்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு நாம் உடன்படப் போவதுமில்லை" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக