13 மே, 2010

விஷம் கொடுத்து என்னைக் கொல்லச் சதி! நளினி புகார்!





ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரும், நளினி, உணவில் விஷம் கலந்து தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக புகார் கூறியுள்ளார்.

ஏப்ரல் 28 மற்றும் 30 தேதிகளில், சிறைத்துறை ஐஜிக்கு நளினி இரண்டு புகார் கடிதங்களை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதங்கள் நளினி வழக்கறிஞர் புகழேந்தி மூலம் வெளிவந்துள்ளது.

அந்தக் கடிதங்களில் நளினி கூறியிருப்பதாவது,

கடந்த 21.4.2010 முதல் புதுக்குற்றவாளி தொகுதியிலிருந்து எல்லா விசாரணை சிறைவாசிகளையும் பழைய குற்றவாளி தொகுதிக்கு மாற்றிவிட்டனர். தற்போது புது குற்றவாளி தொகுதிமுன் 2,3,4,5,6,7,8 ஆகியவற்றில் 200 பேர் அடைக்கக்கூடிய இடம் காலியாக உள்ளது. இதில் ஆறாம் தொகுதியில் நான் மட்டுமே இருக்கிறேன்.

எனக்கு ஏ வகுப்பு இருப்பதால் ஒரு உதவியாளர் உண்டு. எனக்கு அது மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் புது குற்றவாளி முழுவதும் கடந்த 21.4.2010 முதல் பெருக்கவோ, சுத்தம் செய்யவோ யாரையும் அனுமதிப்பதில்லை. அந்த தொகுதிக்கான யூனிட் வார்டர் முதல் தளத்திற்கு வரவோ அங்குள்ள வேலைகளை செய்யவோ தடை செய்யப்பட்டுள்ளது.

இது தவிர காலை - மாலை என்று என்னுடனே சமையலறையிலும், தொகுதியிலும் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் என் உணவில் மருந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என் உணவை காப்பாற்ற நான் கடும் முயற்சி செய்தும் பலன் ஒன்றும் இல்லை. இரவில் கே.சி.லட்சுமி என்ற உதவி ஜெயிலர் 27.4.2010 இரவு (செவ்வாய்கிழமை) வருகிறார்.

இவர்களாக எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து என் தொகுதியில் போட்டு விட்டு என்னை சோதனை செய்து எடுத்ததாக சொல்ல நிறைய வாய்ப்புகள் உண்டு.

வருங்காலத்திலாவது இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லாமல் தடுக்கவும், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன் என்று நளினி கூறியுள்ளார்.

நளினி வக்கீல் புகழேந்தி கூறியதாவது, நளினியை அவர் சந்தித்த போது, வழக்கமாக காலை 5 முதல் 5.30 மணிக்கு எழுந்து விடுவதுதான் அவர் வழக்கம் என்றும், சமீப காலமாக காலை 8.30 மணிக்கு கூட தன்னால் எழுந்திருக்க முடியாமல் மயக்கமாக இருக்கிறது என்றும், உடல் உபாதைகளுக்காக எவ்வித மருந்துகளும் எடுத்துக் கொள்ளாத நிலையில், திடீரென்று, காலையில் இவ்வாறு மயக்கம் ஏற்படுவது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் நளினி தெரிவித்ததாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக