13 மே, 2010

ஏழு பேரடங்கிய தேசிய நல்லிணக்க ஆணைக்குழு: அரசு தெரிவிப்பு

படித்த படிப்பினைகளை கொண்டு பிரச்சினைகளின் அடிப்படையை கண்டறிவதற்காக ஏழுபேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தீர்வினை எட்டாவிட்டால் அது நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சினையாக அமைந்து விடும் என்பதுடன் சமாதானமும் அபிவிருத்தியும் ஒரே பாதையில் முன்னெடுத்து செல்லப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப்பத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அங்கம் வகிப்போரின் பெயர்கள் அடங்கிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதுடன் 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டது முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையிலான விடங்களை அக் குழு விரிவாக ஆராயும்.

பிரச்சினையின் அடிப்படையை கண்டறிந்து தீர்வு காணும் பொருட்டே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு தீர்வினை எட்டாவிடில் சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்களிடையே மீண்டும் பிரச்சினையை தோற்றுவித்து விடும். அது நாட்டில் வாழ்கின்ற ஒன்றரை கோடி மக்களுக்கும் பெரும் பிரச்சினையாகவே அமைந்து விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக