1 மே, 2010

அவசரகாலச் சட்டம், பொன்சேகா விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை



இலங்கையில் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ காவலில் வைத்துள்ளமை ஆகியன குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது. ஆனாலும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஒன்றியத்தின் நோக்கமல்ல என்று ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுத் தலைவர் பேர்னாட் செவேஜ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது இலங்கையை பொறுத்தவிடயம்.

ஆனால், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்திவிடுவதென ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. மனித உரிமைகள், தொழில் உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகியவற்றைப் பொறுத்த மட்டில் இலங்கை ஒழுங்காக நடந்து கொள்ளுமானால் அதன் பின்னர் ஒன்றியம் அதன் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யக்கூடும் அதன் மூலம் இலங்கை அந்த சலுகையை மீண்டும் பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் போன்ற இலங்கை தொடர்பக்ஷிக எதிர்மறையான போக்கினை கடைப்பிடிப்பதாக கூறப்படுவது குறித்து செவேஜ்ஜிடம் கேட்டபோது , அது ஒரு வியாபார ரீதியான உறவுமுறையாகும். பொது அபிப்பிராயம் குறித்து தம்மால் கருத்து தெரிவிக்க முடியாது என்று அவர் பதிலளித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எவ்வாறாயினும், இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கு சுயாதீனமானது. ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான உயர் பிரதிநிதி அஷ்ரன் ஏப்ரல் மாத பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிருவாகம் பற்றிய அபிப்பிராயத்தை தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அஷ்ரன் தனது அறிக்கையில் , தேர்தல் வெற்றி குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவை பாராட்டியதுடன் புதிய அரசாங்கத்துடன் ஜனாதிபதி ஒத்துழைப்பதோடு நல்லிணக்கம் உட்பட இலங்கையின் நீண்டகால தேவையான அரசியல் தீர்வையும் கவனத்தில் எடுப்பாரென நம்பிக்கை தெவித்தார். அரசியலமைப்பை மீறாமலும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியதாகவும் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவதில் பிரச்சினை எதுவும் கிடையாது என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக