விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சை பெறுவதற்காக சமீபத்தில் சென்னை வந்தபோது அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
ஈவு, இரக்கமற்ற சிங்கள ராணுவம் கூட அவர் சிகிச்சை பெறட்டும் என்று இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல அனுமதித்த நிலையில், தமிழ்நாட்டில், பார்வதியம்மாள் சிகிச்சை பெற அனுமதிக்காதது உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது.
பார்வதி அம்மாளை மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியது பற்றி சட்ட சபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய முதல்- அமைச்சர் கருணாநிதி, பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற விரும்பினால் கடிதம் எழுதலாம். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து பார்வதி அம்மாள் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள டமாய் மருத்துவமனையில் இருந்து அவர் கைரேகை பதித்து அந்த கடிதத்தை எழுதி உள்ளார்.
சென்னையில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றுக்கு இந்த கடிதம் வந்துள்ளது.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நான் நீண்ட காலமாக பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வலது காலும், கையும் செயலற்ற நிலையில் உள்ளது. முன்பு நான் தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது முசிறி டாக்டர் ராஜேந்திரனிடம் சிகிச்சை பெற்றேன்.
2003-ல் இலங்கை சென்றதால் அந்த சிகிச்சையை தொடர முடியவில்லை. தற்போது எனது உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நான் முசிறி டாக்டர் ராஜேந்திரனிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
தயவு செய்து நான் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வர உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் விசா தர உதவவும் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் உதவியை என்றும் மறக்கமாட்டேன். நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
நன்றியுடன் தங்கள் உடன் பிறப்பு- பார்வதி.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதி உள்ளார்.
மனிதம் அறக்கட்டளை அக்னி சுப்பிரமணியனுக்கு இந்த கடிதம் வந்துள்ளது. அவர் அந்த கடிதத்தை நேற்று முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு வக்கீலும், மத்திய அரசு வக்கீலும் ஒரு வழக்கில் ஆஜராகி கூறுகையில், பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயார் என்று கூறினார்கள். முதல்- அமைச்சர் கருணாநிதியும் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க முறைப்படி உதவிகள் செய்யப்படும் என்று சட்டசபையில் உறுதி அளித்துள்ளார்.
எனவே பார்வதி அம்மாளை தமிழகம் அழைத்து வர முதல்வர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக