1 மே, 2010

வடக்கில் மீளக்குடியமர்வோருக்கு புலம்பெயர்ந்தோர் உதவ முன்வர வேண்டும் பிரதியமைச்சர் முரளிதரன்






வடக்கில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்கவும் வாழ்வாதார உதவிகள், விவசாய ஊக்குவிப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் புலம்பெயர்ந்துள்ள மக்கள் முன்வர வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

2003 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலகட்டத்தில் இறுதியாக பிரபாக ரனுக்குத் தெரியாமல் கிளிநொச்சியை விட்டுவந்த பின்னர் முதல் முறையாக கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி நகருக்கு பிரதியமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) சென்றிருந்தார்.

குறிப்பாக மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக பார்வையிடுவதற் காகவே அவர் இந்த விஜயத்தை மேற் கொண்டார். மீளக்குடியமர்த்தப்பட்ட 10 குடும்பங்களுள் ஏழு குடும்பத்தில் குடும்பத்தலைவன் இல்லாத அவல நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கணவனை இழந்து பிள்ளைகளுடன் நிற்கும் இவ்வாறான குடும்பங்களுக்கு நிரந்தர வருவாயை ஈட்டித்தரும் விதத்தில் வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

விவசாயம் செய்பவர்களாயின் அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவும் பிள் ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவிகள் பெற்றுக்கொடுக் கப்படல் வேண்டும்.

முதலில் இவர்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும். இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்வதே எனது அடுத்தகட்ட நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சியை விட்டு தான் இறுதியாக வரும் போது கண்ட வளமுள்ள நவீன கட்டடங்கள் நிறைந்த நகராக மீண்டும் மாற்றப்பட வேண்டும். இப்போது சோபை இழந்து போன கட்டடங்களைக் காணும் போது வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்துள்ள மக்கள் இனியாவது உண்மை நிலையை உணர்ந்து அந்த மக்களின் துயர்துடைக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக