விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் இந்தியா வந்து சிகிச்சை பெற விரும்புவதாகத் தெரிவித்தால், அது குறித்து மத்திய அரசு முடிவு தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பிரபாகரனின் தாயாரின் கடிதம் பெறப்பட்டு இரு வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு அக்கோரிக்கையை அனுப்பிவைக்கவேண்டும், மத்திய அரசு அதன் பின் 4 வாரங்களுக்குள் அதன் மீதான முடிவினை தெரிவித்துவிடவேண்டும் என வெள்ளிக் கிழமை நீதிமன்றம் உத்திரவிட்டது.
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இரவு மலேசியாவிலிருந்து, உரிய விசா பெற்று சென்னை வந்த பார்வதி அம்மாள் குடியேற்றத்துறை அதிகாரிகளால் மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தமிழ்நாட்டின் முதல்வர் மு கருணாநிதி கூறியிருந்தார்.
தமக்கு முன்பு தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதா, பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று 2003 ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் இருந்த நடுவணரசு அதிகாரிகள் பார்வதியம்மாளை திருப்பியனுப்பியதாக தமக்கு தெரிய வந்திருப்பதாகவும் கருணாநிதி கூறியிருந்தார்.
பார்வதியம்மாள் சென்னையில் சிகிச்சை பெற விரும்பினால், அவர் இந்தியா வர அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் தாம் கோரத்தயார் என்றும் கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இந்த பின்னணியில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கருப்பன் பார்வதி அம்மாளை சிறப்பு விமானத்தில் தமிழகம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரி பொது நலவழக்கொன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
2003 ஆம் ஆண்டு தமிழக அரசு விடுத்த வேண்டுகோள்படியே பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவித்த மத்திய அரசு, மாநில அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டால், சிகிச்சைக்காக பார்வதி அம்மாளை அனுமதிக்கத் தயார் என்று கூறியது.
இன்று அவ்வழக்கு நீதிபதிகள் இலிபி தர்மாராவ் மற்றும் கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற விளக்கத்தினை படித்துக்காட்டினார்.
மத்திய அரசு வழக்கறிஞரும் மாறியிருக்கும் சூழலில், மீண்டும் கோரிக்கை வந்தால் பார்வதியம்மாள் சிகிச்சை பெற இந்தியா வர அனுமதிக்கத் தயார் என்று தெரிவித்தார். அதன்பேரில் சிகிச்சை பெறுவதற்காக பார்வதிஅம்மாள் மீண்டும் விண்ணப்பித்தால் மத்திய மாநில அரசுகள் விரைந்து அதன் மீது நடவடிக்கை எடுக்க்வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஆனால் இது இடைக்கால உத்தரவுதான். வழக்கறிஞர் கருப்பன் பார்வதி அம்மாள் அரசு செலவில் இங்கே அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்வும் கோரியிருந்தார். அக்கோரிக்கைகள் கோடைவிடுமுறைக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக