1 மே, 2010

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாகிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க யோசனை






அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி), தனது கட்சிக்கான நிர்வாகிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க உள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் விக்கிரமசிங்க உள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் நிலை அமைப்புக்கான நிர்வாகிகள் அக் கட்சியின் ஊழியர்களில் இருந்து நியமிக்கப்படுகின்றனர். இந்த முறையை மாற்றி, தேர்தல் மூலம் கட்சி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரமசிங்கவை கட்சியின் மூத்த உறுப்பினரும், மறைந்த இலங்கை அதிபர் பிரேமதாசவின் மகனுமான சாஜித் பிரேமதாச சந்தித்து இந்த யோசûûயைத் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்கான சில யோசனைத் திட்டங்களை விக்கிரமசிங்கவிடம் விளக்கிக் கூறியதாக சாஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கட்சி நிர்வாகிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது, மக்களின் தேவைகள், குறைகளைக் களையும் விதத்தில் கட்சியின் கொள்கைகளில் திருத்தம் செய்வது உள்ளிட்ட யோசனைகளும் இதில் அடங்கும் என்றார் சாஜித் பிரேமதாச.

பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் கட்சியில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

இதனிடையில், நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததற்கு கட்சியில் நிலவும் ஒற்றுமையின்மைதான் காரணம் என்று அந்தக் கட்சியின் வேறு சில தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சீர்திருத்தங்கள் கொண்டு வருகிறோம் என்கிற பெயரில், கட்சியில் மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்திவிடக் கூடாது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கூட்டணி 144 இடங்களைக் கைப்பற்றியது. இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 60 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இக் கட்சி 82 இடங்களைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக