31 மார்ச், 2010

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி அழைப்பு





இன, மத, குல, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்காக வலுவான பாராளுமன்றத்தை அமைப்பதற்குக் கைகோர்க்க முன்வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அம்பலன்தோட்டையில் நேற்று 30ம் திகதி நடைபெற்ற, மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடையாளத்துடன் எழுந்து நிற்க வேண்டும். அதற்காகப் பேதங்களை மறந்து இலங்கையர் என்ற அடையாளத்துடன் முன்னேறுவது மிகவும் அவசியம்.

இதுவே உங்களதும், உங்களது எதிர்கால சந்ததியினரதும் வளமானதும், சுபீட்சமானதுமான எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். இதனை சகலரும் உணர்ந்துகொண்டு பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் கைகோர்ப்பது அவசியம்.

நான் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரையும் சுதந்திரமடைந்த காலம் முதல் இந்நாட்டினரின் தலா வருமானம் சுமார் ஆயிரம் அமெரிக்க டொலராகவே இருந்தது. இதனை நான் பதவிக்கு வந்த பின்னரான கடந்த நான்கு வருடங்களில் 2300 அமெரிக்க டொலர் வரையும் அதிகரித்துள்ளேன்.

என்றாலும் இந்நாட்டினரின் தலா வருமானத்தை நாலாயிரம் அமெரிக்க டொலர் வரையும் அதிகரிக்கச் செய்வதே எமது இலக்காகும். இதன் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரமும், பொருளாதார வசதியும் மேம்பாடு அடையும்.

மேலும் நாம் எமது எதிர்கால சந்ததியினரை உலகுடன் தொடர்புகொள்ளக் கூடிய சமூகமாகக் கட்டியெழுப்புவதற்கு விரும்புகின்றோம். அதற்காக அவர்களுக்கு மொழி அறிவு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக ஆங்கில மொழி அறிவு இன்றியமையாதது. இது எமது பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்குப் பெரிதும் உதவும். நாம் பிளவுபட்டிருந்த நாட்டை ஒன்றுபடுத்தியுள்ளோம்.

இனி எஞ்சி இருப்பது உங்களதும், உங்களது குழந்தைகளதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்யும் பணி இது. எமது பொறுப்பாகும் இதற்கான அடித்தளத்தை பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போதே இட்டோம்.

அந்த வகையில் மின்னுற்பத்தி திட்டங்கள், துறைமுகங்களின் அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் பயனாக போக்குவரத்துக்கான காலம் குறைந்துள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிதாக துறைமுகம், விமான நிலையம், சர்வதேச தரத்திலான கேட்போர் கூடம், விளையாட்டு மைதானம் என்பன அமைக்கப்படுகின்றன.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் புதிய வேலை வாய்ப்புக்களும், தொழிற்சாலைகளும் உருவாகின்றன. அதன் பயனாக வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். எமது பொருளாதாரமும் மேம்பாடு அடையும்.

ஆகவே தான் நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிக்கும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து வலுவான பாராளுமன்றத்தை அமைப்பதற்காகக் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக