செய்தி ஆய்வாளர் நிராஜ் டேவிட்
இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவும், வருகின்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் திட்டமிடப்பட்ட வகையில் பல சுயேச்சைக் குழுக்கள் போட்டியில் இறக்கப்பட்டிருப்பதும், அங்கு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என்கிறார் செய்தி ஆய்வாளரான நிராஜ் டேவிட்.
இதனால், இலங்கை இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பேரம் பேசும் திறன் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.
ஆயுத ரீதியாக மிகவும் பலமாக இருந்த விடுதலைப் புலிகளின் கரம், ஆயுதங்களை மௌனிக்க வைத்தன் காரணமாக இன்று அடங்கிப் போயிருக்கின்ற நிலையில், தமிழ் மக்களிடம் இருக்கும் அரசியல் பலம் கூட மழுங்கடிக்கப்படக்கூடிய நிலை இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நிராஜ் கூறுகிறார்.
உண்மையில், ஒரு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மிகவும் ஒற்றுமையாக அரசியலைச் சந்ததிந்திருக்க வேண்டிய தமிழ் சமூகம் பிளவுபட்ட நிலையில் தேர்தலை சந்திப்பது அவர்களுக்கு இந்த தேர்தலில் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கை விட கிழக்கு மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்படலாம்
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தமிழ் கட்சிகளுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும், அங்கு இருக்கும் மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஏனைய கட்சிகளில் இருக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கே போகும் வாய்ப்பு உள்ளது; ஆனால் கிழக்கு மாகாணத்தில் அத்தகைய நிலை வரும் போது அந்த பிரதிநிதித்துவம் ஏனைய சமூகங்களுக்கு சென்று விடும் என்று நிராஜ் டேவிட் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் தமிழ் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டாலும், அப்போது ஆயுத ரீதியில் பலமாக இருந்த விடுதலைப் புலிகளின் ஆதரவு ஒரு கட்சிக்கு தெளிவாக வழங்கப்பட்டிருந்தது; அதனால் அந்தக் கட்சி அந்த தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெற முடிந்தது. என்று அவர் கூறுகின்றார். ஆனால் இன்று அந்த நிலை கிடையாது என்றும், தமிழ் வாக்காளர்கள் கூட அண்மைய போர் மற்றும் ஏனைய நிலைமைகள் காரணமாக குழப்பிப் போய் இருப்பதாகவும் நிராஜ் டேவிட் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக