31 மார்ச், 2010

16,800 மெற்றிக் தொன் நெல் ஒரு மாதத்தில் அரசு கொள்வனவு




நாளாந்தம் 50 மெ.தொ. கொள்வனவுக்கும் திட்டம்
இம்முறை பெரும் போகத்தின்போது 2.5 மில்லியன் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் அனைத்து நெல் உற்பத்தியையும் கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது வரை 16, 800 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு தற்பொழுது நாளாந்தம் 50 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்படுகிறது என விவசாய அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

காவலி நிலையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்வதற்கோ விவசாயத்துறையை மேம்படுத்தவோ அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென ஐ.தே.க வும் ஜே.வி.பி யும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் எமது அரசாங்கமே விவசாயிகளுக்கு அதிக நிவாரணங்கள் வழங்கி விவசாயத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு போகத்திற்காக விவசாயி ஒருவருக்கு ஒரு ஏக்கருக்காக 205 கிலோ கிராம் பசளையை அரசாங்கம் வழங்குகிறது. இதற்காக ஒரு விவசாயி 1435 ரூபாவே வழங்குவதோடு அரசாங்கம் 27, 500 ரூபா வழங்குகிறது. 97 வீத பசளை மானியமாக வழங்கப்படுகிறது.

இதன்படி, கடந்த 4 வருடத்தில் 8 போகங் களுக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் 5 இலட் சம் ரூபா முதல் 10 இலட்சம் ரூபா வரை பசளை மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2007-2008 ஆம் வருடத்தில் மாத்திரம் உரம் கொள்வனவு செய்ய அரசாங்கம் 6500 கோடி செலவிட்டது. ஆனால் ஐ.தே.க ஆட்சியில் உரமானியம் நிறுத்தப்பட்டதோடு விவசாயத்துறை அழிக்கப்பட்டது.

ஆனால் இன்று விவசாயத்துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்வனவு செய்வதற்காக நாடு முழுவதும் 5 ஆயிரம் நெற் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, உணவுத் திணைக்கள களஞ்சியங்கள், உரக் களஞ்சியங்கள் என்பனவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நெற் களஞ்சியங்களுக்கு கொண்டு வந்து தரப்படும் நெல்லுக்காக நாட்டரிசிக்கு 29.50 சதம் வழங்கப்படுவதோடு சம்பா அரிசிக்கு ரூபா 31.50 வழங்கப்படுகிறது. போக்குவரத்து செலவாக ஒரு கிலோவுக்கு ஒரு ரூபா 50 சதம் வழங்கி வருகிறோம். நெற் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐ.தே. க ஆட்சிக் காலத்தில் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் இன்று விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பராக்கிரமபாகுவிற்குப் பின்னர் தமது ஆட்சியிலே (2002-2004) நெல் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்ததாக ரணில் கூறி வருகிறார். தனது ஆட்சியில் நெல் சந்தைப்படுத்தும் சபைகளை மூடியதோடு உரமானியத்தை நிறுத்தியதை அவர் மறந்துவிட்டார்.

இம்முறை பல வருடங்களின் பின்னர் வடக்கிலும் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இம்முறை கூடுதல் நெல் உற்பத்தி கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக