31 மார்ச், 2010

31.03.2010 தாயகக்குரல்



இலங்கையின் தலைவிதியையும் தமிழ்மக்களின் தலைவிதியையும் நிர்ணயிக்கப்போகும் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சிலதினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் யதார்த்தத்திற்கு அப்பால் நின்று வாக்குறுதிகளை அள்ளி விசுகின்றன.

இலங்கை அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றபின்னர் நாட்டில் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் கூர்மையடையத் தொடங்கின. இந்த இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணப்போவதாக கடந்த 60 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு இனங்களுக்கும் தலைமை தாங்கியவர்கள் வாக்குறுதி அளித்து பாராளுமன்றத்தை பிரதிநித்துவப் படுத்தி வந்தனர். ஆனால் இவர்களின் காலத்தில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகள் வளர்ந்ததே அன்றி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

நடைபெறவிருக்கும் இந்த தேர்தல்மூலம் அமையப்போகும் புதிய ஆட்சியை தாங்கள்; பிடித்தால் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்ச்ஙீனைக்கு தீர்வு காணுவோம் என ஒவ்வொரு கட்சியினரும் வாக்குறுதியளிக்கின்றனர்.
தமது வெற்றியை உறுதி செய்துகொண்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியலமைப்பை மாற்றி தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்காகத்தான் போராடுகிறோம் என தெரிவிக்கிறது.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்து நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு நாட்டை வளம் மிக்க நாடாக மாற்றுவோம் எனவும், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி)தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி, மற்றும் தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும் எனவும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு என்ற விடயத்தில் அரசிடம் தீர்க்கமானதொரு நிலைப்பாடு இல்லை. எனவே அனைத்து சமூகத்தினையும், அனைத்துக் கட்சிகளையும் பிரதிநித்துவப் படுத்தும் வகையில் தேசிய நல்லிணக்க அரசாங்கம் ஒன்றை அமைப்பதன்மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சுலபமாகிவிடும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கிறது.

தமிழ் மக்களின் இருப்பை நிலைநிறுத்தி பேரம் பேசும் சக்தியாக தமிழ் மக்கள் வரக்கூடிய வகையில் தேர்தல் அமையப்போகிறது. எனவே பேரம் பேசும் சக்தியாக எம்மை அனுப்புங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
ஏனைய பெரும்பாலான கட்சிகள் யதார்த்தமான அரசியல் நடவடிக்கைகளுடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம் எனத் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை முதலிடத்தை வகித்தாலும் உடனடித்தீர்வாக எதிர்பார்ப்பது அகதி வாழ்க்கையிலிருந்து மீண்டு தாம் தமது சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதேயாகும்.
தமிழ் பேசும் மக்கள் பேரம் பேசும் சக்தியாக இருக்கும் நிலை இனி வராது என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தல் உணர்த்திவிட்டது. எனவே இனி பேரம் பேசும் சக்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த 60 வருடங்களில் தமிழ் தலைவர்கள் பேரம் பேசும் சக்தியாக இருந்து பேரம் பேசக்கூடிய சந்தர்ப்பங்களும் கிடைத்தும் இவர்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியவில்லை.

கடந்த காலங்களில் தமிழ் தலைவர்களின் நடைமுறைக்கு அப்பாலான எதிர்ப்பு அரசியல் அணுகுமுறைகள் தமிழ் மக்களை மிகப் பெரிய அனர்த்தனத்துக்கு உள்ளாக்கின.
இனப்பிரச்சினையில் ஒஸ்லோ உடன்படிக்கையை பின்பற்ற வேண்டிய கடப்பாடு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை என்று ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ள கருத்துக் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எழுப்பியுள்ள கேள்வி வேடிக்கையாக உள்ளது.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளமை இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு நிலைப்பாடு இருந்தது என்று இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சான்றிதழ் வழங்குவதாகும்.

எந்தக் காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு நிரந்தர கொள்கை கிடையாது. ஒஸ்லோ உடன்படிக்கையை புலிகள் மறுத்த பின்னர் சமஷ்டி தீர்வு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி எந்தக்காலத்திலும் சமஷடியை ஏற்றுக்கொண்டதில்லை என ரணில் தெரிவித்திருந்தார்..

இராணுவ பலம் இழந்துவிட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் பலம் தேவை என்பதால் தமக்கு வாக்களிக்கவேண்டும் என மாவை சேனாதிராசா தெரிவிக்கிறார். 30 ஆண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் இவர்களுக்கு அளித்த அரசியல் பலத்தை இவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதால் இவர்கள்மேல் நம்பிக்கை இழந்தபின்னரே இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இன்று இவர்கள் மீண்டும் அரசியல் பலம் வேண்டி நிற்கின்றனர்.

இன்று தந்தை செல்வாவின் 112வது பிறந்த தினமாகும். செல்வாவின் பிறந்த தினம் இன்று பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. கடந்த 30 வருடங்களாக தந்தை செல்வாவை மறந்திருந்தவர்கள் இன்றாவது அவரை நினைவுகூருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். தந்தை செல்வா தனக்குபின் தமிழசுக் கட்சியை வழிநடத்துபவர்கள் தமிழ் மக்களை காப்பார்கள் எனக் கூறவில்லை. தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் எனக் கூறிச்சென்றார். அவருடைய தீர்க்கதரிசனத்திற்கு தலைவணங்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக