29 மார்ச், 2010

புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் நோக்கமில்லை, பல்வேறு வகையான திருத்தங்களை மேற்கொள்வோம்-அரசு



எமது அடுத்த அரசாங்கத்தில் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படமாட்டாது. ஆனால் தற்போதைய அரசியல் யாப்பில் பல்வேறு வகையிலான மாற்றங்களை கொண்டுவர எதிர்பார்க்கின்றோம். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் இது தொடர்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது என்று சுற்றாடல் மற்றும் இயற்கைவள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள 17 ஆவது திருத்தச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. எனவே அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

எமது அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவரப்போவதாகவும் வெளிநாடுகளின் தேவைக்கு ஏற்ப அது அமைக்கப்பட்டுவருவதாகவும் சில தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு விடயத்தை இங்கு தெளிவாக குறிப்பிடுகின்றோம். அதாவது புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அதனை பாராளுமன்றத்திடம் நாங்கள் விட்டுவிடுகின்றோம். ஆனால் தற்போதைய அரசியலமைப்பில் பல்வேறு வகையான திருத்தங்களை நாங்கள் மேற்கொள்வோம். எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீதிமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் பொறுப்புக்கூறும் ஒரு பதவியாக மாற்றியமைத்தல், குறிப்பாக ஜனாதிபதி பதவியை பொறுப்புக்கூறும் பதவியாக மாற்றியமைத்தல், மேலும் பிரதேச மற்றும் தொகுதி முறைமை ஆகியவற்றைக்கொண்ட கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தல், அமைச்சு ஆலோசனைக் குழுக்களை மேலும் பலப்படுத்தல், பாராளுமன்றத்துக்கு இருக்கின்ற நிதி தொடர்பான அதிகாரங்களை மேலும் பலப்படுத்தல், அரச நிறுவனங்களை பலப்படுத்தல், அத்துடன் பிரதேச சபைகளுக்கான அதிகாரங்களை விஸ்தரித்தல், கிராம சபைகளை உருவாக்குதல் போன்ற அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் தெளிவாக குறிபிடப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்திலும் அது உருவாக்கப்பட்ட விதத்திலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. முக்கியமாக அரசியலமைப்பு பேரவை நிறுவப்படும் முறையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் 17 ஆவது திருத்தச் சட்டத்தின் நோக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதில் எந்த சிக்கலும் இல்லை. பாரபட்சமற்ற முறையில் செயற்படும் நோக்கில் சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுவது சிறந்தது. ஆனால் 17 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது. அதாவது ஏனைய நாடுகளில் எவ்வாறு இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுகின்றன மற்றும் நிறுவப்படுகின்றன என்பது தொடர்பில் ஆராய்ந்துபார்க்கவேண்டும். ஒற்றையாட்சி முறையின் கீழ் அரசியலமைப்பில் மாற்றங்களுக்கு செல்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக