9 நவம்பர், 2010

மன்னார் - சிலாவத்துறையில் ஆயிரம் மில். ரூபா செலவில் துறைமுகம்


மன்னார் சிலாவத்துறையில் ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் துறைமுகமொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

சிலாவத்துறை அரசினர் கலவன் முஸ்லிம் பாடசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற மீள்குடியேற்ற மக்களுக்கான காணிப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது :

தற்போது முசலி பிரதேச செயலகப் பிரிவில் 6242 குடும்பங்களைச் சேர்ந்த 26500 பேர்கள் மீள்குடியேறியுள்ளனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்கள் இன்றும் தமது குடும்பம் சகிதம் மீள்குடியேறி வருகின்றனர். இங்கு அவர்களுக்கான காணிகளில் பிரச்சினைகள் உள்ளன.

குறிப்பாக சிலாவத்துறையினை பொறுத்தவரையில் இங்கு கடற்படை முகாம் அமைந்துள்ளது. இந்த முகாம் அமைந்துள்ள காணிகள் குடியிருப்புக்கள் இருந்த இடமாகும். ஆகவே இங்கு மீள்குடியேறும், சிலாவத்துறை மக்களுக்கு மாற்று இடங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று 560 குடும்பங்களுக்கு அக்காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றும் நின்றுவிடாமல் இப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சிலர் சில விசமத்தனமான பிர சாரங்களை தமது அரசியல் லாபங்களுக் காக செய்து வருகின்றனர். இதற்கு மக்கள் காது கொடுக்காமல் நமது மாவட்டத்தின் ஒற்றுமைக்கும் இன நல்லுறவுக்குமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தில் மன்னார் மாவட்டத்திற்கு 6 ஆயிரம் வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதில் முதலாவதாக சிலாவத்துறையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. புத்தளம் மன்னார் பாதை திறந்து மக்கள் போக்குவரத்துகள் இடம்பெறுகின்ற போது இப்பகுதி பல் துறைகளிலும் அபிவிருத்தி அடையும், சிலாவத்துறையானது எதிர்காலத்தில் வர்த்தக மத்திய நிலையமாக பரிணமிக்கும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹணூனைஸ் பாருக், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான அலிகான் ஷரீப். எஸ். யஹ்யான், முசலி பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன், சமூகஜோதி எம். றபீக் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக