காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் வவுனியா மாவட்ட மீள்குடியேற்றக் கிராம மக்கள் முகம் கொடுத்திருக்கும் தொல்லைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கவென விசேட வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு ள்ளது.
இராணுவத்தினரும், வனவளத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை நேற்று ஆரம்பித்ததாக வவுனியா மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். இந்த விசேட வேலைத் திட்டத்தின் கீழ் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப் பகுதிக்குள் விரட்டப்படும். அதனைத் தொடர்ந்து அவை மீள்குடியேற்றக் கிராமங்களுக்குள் பிரவேசிக்க முடியாத படி மின்வேலி அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
வவுனியா மாவட்ட மீள்குடியேற்ற கிராமங்களில் யானைகள் மற்றும் காட்டு விலங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் இரவை அச்சத்துடன் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாளிகை நொச்சிக்குளம் பிரதேசத்தில் குறைந்தது 50 யானைகள் கூட்டமாக நிலைகொண்டு அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
பதினொரு வனவிலங்கு அதிகாரிகளும் இவர்களுக்கு உதவியாக இராணுவத்தினரும் இணைந்து மூன்று கட்டங்களாக யானைகளையும் வனவிலங்குகளையும் விரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என குறிப்பிட்ட அரச அதிபர் காடுகளுக்குள் மிருகங்கள் சென்றதும் எல்லையில் மின்சார வேலிகள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.
மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தினால் கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை மற்றும் பயன்தரும் மரங்களை அழித்து உணவாக்கி வந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக