25 நவம்பர், 2010

இந்திய அமைச்சர் கிருஷ்ணா இன்று வருகை; பாக். ஜனாதிபதி ஞாயிறன்று கொழும்பில்

இந்திய அமைச்சர் கிருஷ்ணா இன்று வருகை;
பாக். ஜனாதிபதி ஞாயிறன்று கொழும்பில்

வெளிநாட்டு பிரமுகர் வருகையால் கூடுதல் நன்மை

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்பாகிஸ்தான் ஜனாதிபதி, இந்திய அமைச்சர் ஆகியோரின் இலங்கை விஜயத்தால் நாட்டுக்கு பலகோடி பெறுமதியான நன்மைகள் கிடைக்கவுள் ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

இது தவிர இலங்கையில் முதலீடு செய்வதற்காக பெல்ஜியம் மற்றும் மலேசிய நாட்டு உயர் மட்ட வியாபாரிகள் குழுக்களும் இலங்கை வருவதாக அமைச்சர் கூறினார்.

வரவு - செலவுத்திட்ட இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியதாவது:- இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இன்று (வியாழன்) இலங்கைக்கு வருகிறார். அவர் வெறும் கையுடனன்றி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை எடுத்து வருகிறார்.

யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்வார். 250 அமெரிக்க டொலர் செலவில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தையும் கிருஷ்ணா ஆரம்பித்து வைக்க உள்ளார்.

கடனாக அன்றி உதவியாகவே இந்த வீடமைப்புத் திட்டம் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.

இது தவிர 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்கில் மூன்று ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பணியையும் அவர் ஆரம்பித்துவைப்பார்.

அத்தோடு காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பவற்றை அபிவிருத்தி செய்யவும் இந்தியா விசேட திட்டங்களை முன்னெடுக்க உள்ளது. தனது விஜத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திலும் ஹம்பாந்தோட்டையிலும் இரு கொன்சூலர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படும்.

பாக். ஜனாதிபதி விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பும் தினத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அல் சர்தாரி இலங்கைக்கு வருகை தருகிறார். அவரும் இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் பல திட்டங்களை எடுத்து வருகிறார். சீனி, சீமெந்து கைத்தொழிற்சாலைகள் சிறுமத்திய கைத்தொழிற் துறைகள் ஆரம்பிப்பது குறித்து அவரின் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும்.

பிரி. அமைச்சர் வருகை

டிசம்பர் மாதம் 7, 8, 9 ஆகிய தினங்களில் பிரித்தானிய பொது நலவாய வெளிநாட்டு ராஜாங்க அமைச்சர் லெஸ்டயார் பேர்ட் இலங்கைக்கு வருகை தருகிறார். அவர் வடக்கு மற்றும் தென் பகுதிகளுக்கு செல்ல உள்ளார். எமக்கு மேலைத்தேய நாடுகளுடன் போதிய உறவு கிடையாது என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை இவரின் விஜயம் பொய்யாக்குகிறது.

தற்பொழுது பெல்ஜியம் நாட்டிலிருந்து 50 உயர்மட்ட வியாபாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இவர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து நமது நாட்டு கம்பனிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். மலேசிய வியாபாரிகள் குழுவொன்று டிசம்பர் 4-6 ஆம் திகதிகளில் இலங்கையில் விஜயம் செய்ய உள்ளது.

இந்திய அமைச்சர் வருகை

இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஸ்ரீ ஆனந்த சர்மாவும் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தி உயிரூட்ட இவரின் விஜயம் பங்களிக்கும்.

ஐ. தே. க. குற்றஞ்சாட்டுவது போல இதுவெல்லாம் தேவதைக் கதைகளல்ல. ஒருபோதும் நாட்டில் இத்தகைய நிலை ஏற்பட்டது கிடையாது. இலங்கை குறித்து சர்வதேச நாடுகளிடையே பாரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக பெருமளவு நன்மைகள் இலங்கையை வந்தடைகிறது. சுற்றுலாவுக்கு உகந்த சூழல் இலங்கையில் காணப்படுவதாக நியூயோர்க் டைம்ஸ் தனது ஆசிரியர் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு விருப்பமான சூழ்நிலை இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு எத்தகைய பலாபலன்கள் கிடைக்கிறது என்பதன் அடிப்படையிலே இந்த வரவு செலவுத் திட்டத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த வகையில் இலங்கை வரலாற்றில் முன்வைக்கப்பட்ட மிகவும் சிறந்த வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் தலைவராக மட்டுமன்றி ஆசிய வலயத்தின் தலைவராகவே ஏற்கப்பட்டுள்ளார். இதனை ஐ. நா. செயலாளர், மலேசிய பிரதி பிரதமர் உட்பட பல வலயத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாலைதீவு அரசியல் நெருக்கடியை தீர்த்தது போன்று நேபாள பிரச்சினையையும் தீர்க்க முன்வருமாறு நேபாள ஜனாதிபதி நமது ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக