16 நவம்பர், 2010

சரணடைய வந்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை பாது. செயலரின் பணிப்புரைக்கமைய செயற்பட்டோம் - மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா


வன்னியில் நடைபெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது சரணடைந்த புலிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது எனப் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இராணுவத்துக்குத் தெளிவான அறிவுறுத்தலை வழங்கியிருந்ததாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் சாட்சியமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜயசுந்தர, பி. பி. வரவேவ மற்றும் எம். இஸட். ரசீன் ஆகியோர் முன்னிலையில் மேலும் சாட்சியமளித்த அவர்;

மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தில் தப்பி வந்த பொதுமக்கள் மற்றும் புலி உறுப்பினர்கள் தண்ணீர் போத்தல் வழங்கியே வரவேற்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இறுதி நேரத்தில் அப்பாவிப் பொது மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் சரணடைந்தனர்.

சரணடைந்தவர்களில் காயமடைந்த வர்களும் இருந்தனர். கடும்பாதிப்புக் குள்ளானவர்கள் மேலதிக சிகிச்சைக் காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யுத்தத்தில் புலிகள் தோல்வியுறுகின்றமை உறுதியானதால் மக்கள் வெளியேறினர்.

அவ்வாறு சரணடையத் தீர்மானித்த மக்கள் வெள்ளைக்கொடிகள் மாத்திரமன்றி, வெள்ளைநிற ஆடைகள் மற்றும் தமது கைகளை உயர்த்தியவாறு வந்தனர். அவர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகள் என்பதால் எவருக்கும் பாதிப்பின்றி வரவேற்றோம்.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை எந்தவிதமான மனித உரிமை மீறல்களுமின்றி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. புலிகளின் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றிய போது எந்தவிதமான மனித உரிமை மீறல் முறைப் பாடுகளும் செய்யப்படவில்லை.

இறுதிக் கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததும் 2009 ஆம் ஆண்டு 18ம் திகதி வெளிநாட்டி லிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நள்ளிரவு தனது வாழ்த்துக்களைப் பாதுகாப்புப் படையினருக்கு தெரிவித்திருந்தார் என்றும் ஷவேந்திர சில்வா கூறினார். 1984ம் ஆண்டு கடேட் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்து கொண்ட ஷவேந்திர சில்வா, புலிகளுக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர். இவர் தற்பொழுது ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகக் கடமையாற்றி வருகிறார்.

நேற்றைய விசாரணையின் போது சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன, சிரேஷ்ட அரச சட்டத்தரணி திலான் ரத்னாயக்க, சட்டத்தரணி ஜொகான் லியனகம ஆகியோர் ஆஜராகினர். பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி நலின் லதுவஹெட்டி ஆஜரானார். வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான அடுத்த நீதிமன்ற விசாரணைகள் இன்று நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக