16 நவம்பர், 2010

காணாமல் போனோரைக் கண்டறியவும் முகாம்களில் உள்ளோரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணாமல் போன தமது உறவுகளையும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளையும் மீட்டுத் தருமாறும் தமது அடிப்படை வசதிகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சி, கண்டாவளை, முரசுமோட்டை பகுதிகளில் மீள் குடியேறியுள்ள மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வட்டக்கச்சி, கண்டாவளை, முரசுமோட்டை கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அப்பகுதி கிராம சேவகர்கள் தலைமையில் பொதுமக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்புக்களின் போதே அப்பகுதி மக்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட்டக்கச்சி கிராம சேவகர் அலுவலகத்தில் பெருமளவான மக்கள் எம்.பி.யை சந்தித்து அவரிடம் மகஜர்களை கையளித்தனர். தனது மூன்று பிள்ளைகள் யுத்தகாலத்தின் போது காணாமல் போயுள்ளதாக அவர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டக்கச்சி உடைகத்தகண்டியைச் சேர்ந்த க. மகேஸ்வரி என்ற தாயார் கோரிக்கை விடுத்தார்.

இதேபோல் அழகரட்ணம் வீதியைச் சேர்ந்த வே. கனகசபை என்பவர் தனது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை மீட்டுத் தரக் கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஹட்சன் வீதியைச் சேர்ந்த கு. இரத்தினேஸ்வரி என்பவர் வழங்கிய மகஜரில் தனது இரண்டு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறிந்து தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தம்மையா லிங்கேஸ்வர சூரியம் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்; யுத்தத்தின் போது தனது இரண்டு பிள்ளைகள் பலியானதாகவும், ஒரு மகனை காணவில்லையென்றும் காணாமல் போன மகனையாவது மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதேபோல் கிளாறா ஜெஸ்மின் என்ற பெண் சமர்ப்பித்த மகஜரில் தனது கணவன் கொக்கனையில் வைத்து காணாமல் போனதாகவும், அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை ஆறுமுகம் கருப்பையா, மு. நமசிவாயம், ரா. நந்தினி, கோ. பிரதீபா, அ. மயில்வாகனம் , ம. இருதயராசன் ஆகியோர் தமது பிள்ளைகள், மற்றும் கணவன் மார் தடுப்பு முகாமில் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

தனபாலசிங்கம் டேனியல், மா. நகுலேஸ்வரன், சவரியப்பன் ஆகியோர் தமது உறவினர்கள், காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல் கண்டாவளை, முரசுமோட்டை பகுதி மக்களும் தமக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் காணாமல் போன மற்றும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.யிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்விடயங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. மக்களிடம் உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக