23 நவம்பர், 2010

ஜனாதிபதி சபையினுள் வந்ததும் பலத்த கரகோஷம்: 2 1/4 மணி நேரம் உரை






2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சுபநேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1.35 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வின் தலைமையில் கூடியது. முதலாவது நிகழ்வாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.

பாராளுமன்ற அவைக்கு சமுகமளித்த ஜனாதிபதியை அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் கலரியில் குழுமியிருந்த உயரதிகாரிகள் ஆகியோர் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை 2 1/4 மணி நேரம் நீடித்தது. வரவு - செலவுத் திட்ட உரையை பிற்பகல் 1.40 மணிக்கு ஆரம் பித்த ஜனாதிபதி பிற்பகல் 3.50 வரை நிகழ்த்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர், ஐ.தே.க. எம்.பிக்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள், ஜனநாயக தேசிய முன்னணி எம்.பிக்கள் அடங்கலான சகல எம்.பிக்களும் சபையில் பிரசன்னமாகியிருந்தனர்.

பாராளுமன்ற கலரி அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், அமைச்சு உயரதிகாரிகள் மற்றும் ஊடக வியலாளர்களால் நிரம்பியிருந்தது.

ஜனாதிபதியின் உரையை எதிர்க் கட்சி எம்.பிக்கள் அமைதியாக செவி மடுத்தனர். ஆனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக உரையாற்றும் போது எதிர்க் கட்சியினர் கூச்சல் எழுப்பினர்.

எதிர்க் கட்சி எம்.பிகளின் குறுக்கீடுகளுக்கு பதிலளித்தவாறே சிரித்த முகத்துடன் ஜனாதி பதி தனது உரையைத் தொடர்ந்தார். ஜனாதி பதியின் உரை முடிவடையும் வரை எதிர்க் கட்சியினர் சபையில் அமர்ந்திருந்தனர்.

வரவு - செலவுத் திட்ட உரை முடிவில் ஜனாதிபதி எதிர்க் கட்சி எம்.பிகளுடன் அவையில் சுமுகமாக அளவளாவினார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விருந்துபசாரம் வழங்கினார். இந்த விருந்துபசாரத்தில் பெரும்பாலான ஆளும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.

சுமார் அரை மணி நேரம் தங்கியிருந்த ஜனாதிபதி ஆளும், எதிர்க்கட்சி எம்.பி. களுடன் சுமுகமாக உரையாடினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக