26 அக்டோபர், 2010

நுரைச்சோலை அனல் மின் நிலைய தீ விபத்து; முழுமையான விசாரணை ஆரம்பம் அமைச்சர் நேரில் சென்று ஆராய்வு


நுரைச்சோலை அனல் மின் நிலையத் தீ விபத்து தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும் விரிவான விசாரணைகளை நேற்று ஆரம்பித்தனர்.

இவ்விசாரணையின் நிமித்தம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு நேற்று நேரில் சென்றதாக மின்சக்தி அமைச்சு வட்டாரங்கள் நேற்று கூறின.

கொழும்பிலிருந்து சென்றுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இதேவேளை, மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரில் சென்று தீ அனர்த்தம் தொடர்பாக பார்வையிட்டதுடன் அதிகாரிகளுடன் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்துமுள்ளார்.

இதேநேரம் இத் தீ விபத்து தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றை யும் நடத்தினார். இச் செய்தியாளர் மாநாட்டில் இத் தீ விபத்து காரணமாக அரசாங்கத்திற்கோ, இலங்கை மின்சார சபைக்கோ எதுவிதமான நஷ்டமும் ஏற்படவில்லை. அத்தோடு பிரதான மின்னுற்பத்தி நிலையத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமைச்சர் நேற்றுக் கூறினார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்,

திட்டமிட்டபடி ஜனவரி மாதம் முதல் இம்மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து 300 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இத்தீவிபத்து சம்பவம் குறித்து பொலிஸ் மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விசாரணையின் அடிப்படையில் இது விபத்து நாசகார செயலா என்பது தெளிவாகும்.

இதுவரை வெளியான தகவல்களின் பிரகாரம் வெல்டிங் (இரும்பு ஒட்டு) பணிகளில் ஈடுபட்டிருந்த போது தெறித்த தீ சுவாலையே இவ்விபத்துக்கு காரணம் என்பது தெரிய வருகின்றது. என்றாலும் இந்தத் தீ ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் துரிதமாக அணைக்கப்பட்டுள்ளது.

தீவிபத்தினால் அனல் மின் நிலையப் பணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. மின் நிலைய பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகிறன. தீ விபத்தினால் நிர்மாணப் பணிகளுக்கு மாத்திரம் சிறு தாமதம் ஏற்பட்டது. குற்றப் புலனாய்வு பிரிவு, பொலிஸாரினதும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளதும் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

நுரைச்சோலை அனல் மின் நிலைய பணிகள் 2012ம் ஆண்டே நிறைவு செய்யப்பட இருந்த போதும் 2 வருடங்கள் முன்னதாகப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி நவம்பர் மாதத்தில் மின்னுற்பத்தி நிலைய கொதிகலன்களை சூடேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேவேளை நவம்பர் மாதத்தில் நிலக்கரி ஏற்றிய கப்பல் இங்கு வந்தடைய உள்ளது. ஒரு டொன் நிலக்கரி 115 டொலருக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. இதனுடாக மின் உற்பதி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்திற்கு 9.00 ரூபா முதல் 10.00 ரூபா வரை செலவாகும். ஆனால் டீசல் மூலம் மின் உற்பத்தி செய்ய 19 ரூபா செலவாகிறது.

சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் தீ விபத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை அந்தக் கம்பனியே ஏற்கும். நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் காலத்தில் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக