25 அக்டோபர், 2010

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலாவது கப்பல் நவ. 18 வந்தடையும் துறைமுகப்பகுதியில் 27 நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வருகை



ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக முதலாம் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு சிறுசிறு பணிகள் மாத்திரமே தற்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. நவம்பர் 18 ஆம் திகதி முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்தடைய உள்ளதோடு இரண்டாம் கட்டப் பணிகள் அன்றைய தினமே ஆரம்பிக்கப்படும் என துறைமுக அதிகார சபைத் தலைவர் பிரியத் பந்து விக்ரம கூறினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக இறுதிக் கட்ட பணிகள் குறித்து ஆராய்வதற்காக துறைமுக விமான சேவைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைமையிலான குழு நேற்று முன்தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் செய்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த அதிகார சபைத் தலைவர்,

ஜனாதிபதியின் இரண்டாவது பதவி ஏற்பை முன்னிட்டு சர்வதேச துறைமுகம் திறந்து வைக்கப்பட உள்ளது. இறுதிக் கட்டப் பணிகள் துரிதமாக மேற்கொள் ளப்படுகிறது. 18ஆம் திகதி முதல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு தொடர்ச்சியாக கப்பல்கள் வர உள்ளன. இதனூடாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய அடித்தளமிடப்படுகிறது. ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றுவதற்கான பிரதான மைல்கல்லாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமையும்.

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் முதலீடு செய்வதற்கு சீமெந்து, பசளை, சீனி, உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு, களஞ்சியப்படுத்தல், டின் மீன் சார்ந்த 27 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். இவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இங்கு முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும். துறைமுக கட்டணம் தவிர வேறு எந்தக் கட்டணமும் அறவிடப் படமாட்டாது. தென் ஆசியாவிலே சேவை வழங்கும் பிரதான இடமாக ஹம்பாந் தோட்டை துறைமுகம் அபிவிருத்தி செய் யப்படும். சர்வதேச தரத்திலான வசதிகள் இங்கு வருபவர்களுக்கு வழங்கப்படும்.

இரண்டாம் கட்டம்

இரண்டாம் கட்டப் பணிகள் நவம்பர் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதோடு இதற்கு 800 அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும். சீனா அரசே இதற்கும் கடனுதவி வழங்குகிறது. 3 1/2 வருடங்களில் 2ம் கட்டப் பணிகள் நிறைவு செய்யப்படும். முதலாம் கட்டத்தின்போது 4 கப்பல்களே நிறுத்த முடியும். இரண்டாம் கட்ட முடிவில் 10 கப்பல்கள் நிறுத்தக் கூடியதாக வசதி செய்யப்படும். துறைமுக நிர்வாகக் கட்டிடம் 14 மாடிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்கு முன் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும்.

18 முதல் பார்வையிட அனுமதி

இறுதிக் கட்டப் பணிகள் முன்னெடுக்கப் படுவதால் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. நவம்பர் 18 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு துறைமுகத்திற்கு வர அனுமதி வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக