புனர்வாழ்வு நிலையங்களில் பராமரிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உணவுக்காக மட்டும் நாளொன்றுக்கு நூறு மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறதென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை 306 முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மார்ச் மாதம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைக்குரிய தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வுள்ளனர். இந்தத் தேர்தலில் நீங்களும் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரமுடியும்.
அதன் வழியாக அரசியல் பலமும் அரச பலமும் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதுவரையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐயாயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து கொண்டுள் ளனர்.
வளர்முகநாடுகளின் நிலைக்கு சமனான முறையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போரின்போது வெற்றிகொண்ட இராணுவத்தினர் சரண் அடைந்த போராளிகளையும் மனித நேய அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகின்றது. புனர்வாழ்வு நிலையங்களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 306 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். 200 பெண்களும், 106 ஆண்களும் அடங்கியிருந்தனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இவர்களை பொறுப்பேற்றனர்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் எஸ். சதீஸ்குமார், செயலாளர் எம். திசாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக