7 செப்டம்பர், 2010

சர்வாதிகார ஆட்சிக்கு ஜே.ஆரின் அரசியலமைப்பே போதுமானது :விமல் வீரவன்ச

சர்வாதிகார ஆட்சிக்கு ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பே போதுமானது.

புதிய திருத்தங்கள் எதுவும் தேவையற்றது. வெளிப்படை தன்மை குறித்து பேசும் ஐக்கிய தேசியக் கட்சி, இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் போன்றவற்றின் வெளிப்படைத் தன்மை குறித்தும் பதில் கூற வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறாத ஆணைக்குழுக்களும் பொது மக்கள் நிர்ணயிக்காத ஜனாதிபதியின் பதவிக் காலமும் நாட்டிற்கு தேவையில்லை. உத்தேச திருத்த யோசனைகளினால் சிறுபான்மை இன மக்களுக்கோ ஜனநாயகத்திற்கோ எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 1978 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தனாவில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு நாட்டிற்கு மிகவும் ஆபத்தானதொன்றாகும். இதனை திருத்தி அமைக்க வேண்டும் என்ற தேவை சகலருக்கும் இருந்தது. அதனையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

உத்தேச அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரத்திற்கு காணப்படும் அதிகாரங்களை குறைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளையே தற்போது முன் வைக்கப்பட்டுள்ள திருத்த யோசனையாகும்.

எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படும் திருத்த யோசனைகள் தேர்தல் முறை செனட்சபை, சகல இன மக்களுக்கான பொதுவான தீர்வுத்திட்டம் என பல்வேறு திருத்த யோசனைகளை அரசாங்கம் முன் வைக்க உள்ளது. திருத்த யோசனைகள் தொடர்பில் தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்த பாராளுமன்ற அமர்வில் எதிர்க் கட்சிகளுக்கு சந்தர்ப்பம் உள்ளது.

அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள திருத்த யோசனைகள் சர்வாதிகார ஆட்சிக்கே வழி வகுக்கும் என கூறுவதால் எல்லாவிதமான உண்மை தன்மையும் இல்லை. தற்போதைய அரசியலமைப்பு இருந்த கடந்த காலப் பகுதியில் கறுப்பு ஜூலை ஊடாக அடக்கு முறை என பல்வேறு ஜனநாயக விரோத செயற்பாடுகள் இடம்பெற்றன. அதேபோன்று தான் சுயாதீன ஆணைக் குழுக்களுமாகும். எவருக்கும் கட்டுப்படாத ஆணைக்குழு நாட்டிற்கு எதற்கு? எனவேதான் அனைத்து ஆணைக்குழுக்களும் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் திருத்தங்கள் தேவை என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக