20 செப்டம்பர், 2010

அரசிடமிருந்து எனது கணவருக்கு நீதி கிடைத்துவிடப் போவதில்லை -அனோமா பொன்சேகா



அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அதன் உச்சஸ்தானத்திலிருந்தோ எனது கணவர் சரத் பொன்சேகாவுக்கு நீதி நியாயம் கிடைத்து விடப் போவதில்லை என்று தெரிவித்த அனோமா பொன்சேகா, இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகள் மனசாட்சியுடன் தான் நடந்து கொண்டனரா என்றும் கேள்வியெழுப்பினார்.

ஜனநாயகத் தேசியக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை நாவல சோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தனது கணவர் சரத் பொன்சேகா எம்.பி மீதான இரண்டாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனோமா பொன்சேகா இங்கு மேலும் கூறுகையில்,

சரத் பொன்சேகா எத்தகைய இராணுவ வீரர், வெற்றியாளர் என்பதை பாடசாலை மாணவர்கள் முதல் சகலரும் அறிந்து வைத்துள்ளனர். அவ்வாறான அந்தஸ்துக்குரிய எனது கணவர் இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கடத்தியே செல்லப்பட்டார் என்றும் நான் முன்னரே கூறியிருந்தேன்.

எனது கணவர் மீதான வழக்குகள் அனைத்துமே அரசியல் பழிவாங்கல்களாகும். இதில் சந்தேகமே கிடையாது. அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகளை நான் நன்கு அறிவேன். அவர்கள் அனைவருமே இராணுவத் துறையில் ஏதோவொரு வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும் இந்த நீதிபதிகள் பொம்மைகளாகவே செயற்பட்டனர் என்பதையும் கூறி வைக்க வேண்டும். இவர்களை இயக்கியவர் உச்சஸ்தானத்தில் உள்ளவராவார். மேற்குறித்த நீதிபதிகளும் அச்சத்தினாலேயே பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

இதனால் எனது கணவருக்கு நீதி கிடைக்கும் நியாயம் பேணப்படும் என்பதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. எனவே, மக்களே அணி திரண்டு வந்து இந்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவரை மீட்பதற்கு முயற்சிக்க வேண்டும். அச்சத்தில் முடங்கி இருக்க வேண்டாம். வெளியில் வந்து எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் என பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். எனது கணவர் எத்தகையவர் அவருக்கு எதிரான இராணுவ நீதிமன்றம் எத்தகையது என்பதை இன்று மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக