1 ஜூலை, 2010

முந்தலில் மீட்கப்பட்ட சடலத்தை ஏற்க இந்தியத் தூதரகம் மறுப்பு

புத்தளம் முந்தல் கடல் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மீட்கப்பட்ட இந்தியரின் சடலத்தை பொறுப்பேற்க இந்திய உயர்ஸ்தானிகரகம் மறுத்துள்ளது.

சடலம் நேற்று புத்தளத்தில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. தமக்குச் சடலத்தைப் பாதுகாக்கக் கூடிய வசதிகள் இல்லை என்பதால் அதனைப் பொறுப்பேற்க இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இறந்தவரின் உறவினர் வரும் வரை, அவரது சடலத்தை வைத்தியசாலை சவச்சாலையில் வைத்திருப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தல் பொலிஸ் பிரிவில் தொடுவாவ பள்ளிவாசல் பாடு கடற் பிரதேச மீனவர்களே இது தொடர்பான தகவலைப் பொலிஸாருக்கு வழங்கியிருந்தனர்.

தங்கராசா செல்வராசு என்ற சென்னையை சேர்ந்த இளைஞர் வெள்ளவத்தையில் உள்ள பிக் பனானா என்ற ஹோட்டலில் பணியாற்றி வந்தவர். ஹோட்டல் உரிமையாளரான தமிழருக்கும் இவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியா செல்ல இளைஞர் முற்பட்டுள்ளார். அவ்வேளை, ஹோட்டல் உரிமையாளர் தமது நண்பரான கொழும்பு புலனாய்வு தலைமையக பொறுப்பதிகாரி சந்தன டி சில்வாவிடம் கூறி இளைஞரை கைதுசெய்யுமாறு கேட்டுள்ளார்.

சந்தன டி சில்வாவின் உத்தரவின் பேரில் மதவாச்சியில் வைத்து இந்திய இளைஞர் கைதுசெய்யப்பட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் வைத்து அவரிடம் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்தே அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு சடலத்தை புத்தளத்தில் வீசுவதற்கு பொலிஸ் அதிகாரி சந்தனவும் ஹோட்டல் உரிமையாளரும் முயற்சித்துள்ளனர். இதன் போதே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக