1 ஜூலை, 2010

முன்னாள் பெண் போராளிகள் துன்புறுத்தல் பாலியல் சேஷ்டைகளுக்கு உள்ளாகின்றனர்-எஸ். ஸ்ரீதரன்

புனர்வாழ்வளிக்கப்பட்டு சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் முன்னாள் போராளி யுவதிகள் பாலியல் சேஷ்டைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர் என்று கூட்டமைப்பு எம்.பி.யான எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண் டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர் ந்து உரையாற்றுகையில்,

வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக மக்களின் வாழ்க்கையில், வாழ்வியல் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால் அதில் எந்தவிதமான பலனும் கிடையாது. நாடளாவிய ரீதியில் ஆயிரத்திற்கு அதிகமான பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். வரவு செலவுத் திட்டத்தில் பட்டதாரிகளுக்கென எந்த ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை. எனவே வேலை வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகள் இளைஞர் யுவதிகளின் நலன்கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் அரச ஊழியர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. எனவே விசேட பிரேரணையின் மூலமாவது அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும். வடக்கில் மீள்குடியேறிய அரச ஊழியர்களுக்கு சைக்கிளொன்றை வழங்குவதற்கு கூட வசதிகள் இல்லை. எனவே அவர்கள் சைக்கிள், வீடு போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு கடனுதவி திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

அரச துறையில் பல்வேறு முக்கிய பதவிகளில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் இருப்பதனால் தகுதியான இளைஞர், யுவதிகள் போதிய வாய்ப்புகளின்றி பாதிக்கப்படுகின்றனர். எனவே 60 வயதிற்கு மேற்பட்டோர் அரச துறையில் பதவிகளை வகிப்பதை தவிர்க்கும் வகையில் சட்டமூலமொன்று கொண்டு வரப்பட வேண்டும். யுத்த காலத்தின் போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களது நிலைமைகள் என்ன என தெரியாமல் பெற்றோர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நிலைமை பற்றி தேடி கண்டறியப்பட வேண்டும்.

இதேபோல் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். புனர்வாழ்வளிக்கப்பட்டதாக இருந்த முன்னாள் போராளிகளாக இருந்த தமிழ் யுவதிகள் சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு இந்த யுவதிகள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சிங்களமும் தெரியாது. அதுமட்டுமன்றி இந்த யுவதிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சேஷ்டைகளுக்கும் ஆளாகின்றனர். புனர்வாழ்வு என்பதை விட அவர்களை அவர்களது குடும்பத்துடன் இணைப்பதே அவர்களின் மாறுதலுக்கு பேருதவியாக இருக்கும். எனவே இவ்விடயத்தில் அனைவரும் ஒரு தாய் பிள்ளை என்ற வகையில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக