9 ஜூலை, 2010

சூரிய சக்தியில் வானமே வசப்பட்டது புதிய சாதனை





சுவிட்சர்லாந்தில் சூரிய சக்தியில் இயங்கும் விமானம் ஒன்று சரித்திரத்தில் இல்லாத வகையில் இரவு நேரத்தில் பறந்து சாதனை படைத்துள்ளது.

பரிசோதனைகளுக்காக உருவாக்கப்பட்டிருந்த இந்த விமானம் சூரிய சக்தியை மட்டும் பயன்படுத்தி இடைவிடாது ஒரு நாள் முழுக்கப் பறந்துள்ளது.

ராட்சத பலூனில் பறந்து உலகை வலம் வந்த முதல் நபர் என்ற பெருமைக்குரிய சுவிட்சர்லாந்தின் சாகச ஆர்வலர் பெர்த்ராண்ட் பிக்கார்த்தின் சிந்தனையில் உருவானது சோலார் இம்பல்ஸ் என்ற இந்த விமானம்.

ஒரு ஆள் மட்டும் அமர்ந்து செல்லக்கூடிய ஒரு இலகுரக விமானம் இது.

கார்பன் ஃபைபர் எனப்படும் கரி இழைகளால் ஆன இந்த விமானத்தின் எடை என்னவோ ஒரு காருடைய எடைதான் என்றாலும், இதனுடைய இறக்கைகள் ஒரு ஜம்போ ஜெட் விமானத்தின் அளவுக்கு அறுபது மீட்டர்கள் நீளமுடையவை.

இந்த இறக்கைகளின் மேல் பக்கம் முழுக்க சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை உருவாக்குகின்ற சோலார் செல்கள் பன்னிரண்டாயிரம் அளவுக்கு பொருத்தப்பட்டிருந்தன.

இந்த விமானத்தில் ஒரேயொருவர் மட்டுமே செல்ல முடியும், இந்த விமானம் செல்லக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர்கள்தான், இந்த விமான இயந்திரத்தின் வலு ஒரு சிறிய ஸ்கூட்டருக்கு உரியதுதான் என்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்தில் இதனனைக் கொண்டு உடனடியாக பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடப் போவதில்லை எனத் தெரிகிறது.

ஆனால் சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காத சக்திகளைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதற்கு தன்னுடைய இந்த விமானம் ஒரு எட்டுத்துக்காட்டு என்று விமானத்தை உருவாக்கிய பெர்த்ராண்ட் பிக்கார்ட் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

விமானங்கள் இயங்குசக்தியைப் பெறுவதில் எதிர்காலத்தில் மாபெரும் திருப்புமுனையை இந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும், ஆகவே விமானங்களின் சரித்திரத்திலே ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கம் இது என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக