அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான போராட்டத்தை அடுத்து கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தை மூட ஐ நா முடிவு செய்துள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்களின் பணிகள் சுமுகமாக நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளை சீர் செய்ய இலங்கை அரசு செய்யத் தவறியது ஏற்றுக் கொள்ளமுடியாததாக ஐ நா வின் தலைமைச் செயலர் கருதுவதாக அவரது சார்பில் வெளியாகியுள்ள அறிக்கை கூறுகிறது.
அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரின் தலைமையில் ஒழுங்கற்ற வகையில் கொழும்பிலுள்ள ஐ நா வின் அலுவலகம் முன்பாக நடத்தப்படும் போராட்டங்கள் காரணமாக, அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சிப் பணிகளுக்கான அலுவலகத்தை மூட தலைமைச் செயலர் முடிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
அங்கு இடம் பெற்று வரும் நிகழ்வுகளை அடுத்து, இலங்கையிலுள்ள ஐ நா வின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூன் அவர்களை ஆலோசனைக்காக நியூயார்க் வரும்படி பான் கீ மூன் அழைத்துள்ளார்.
இலங்கை அரசு தனது கடப்பாடுகளை உணர்ந்து கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஐ நா வின் தலைமைச் செயலர் கோரியுள்ளதாக அவரது சார்பிலான அறிக்கை கூறுகிறது.
ஐ நா அலுவலகம் முன் நடக்கும் போராட்டம்
ஐ நா வின் அலுவலகம் இலங்கையில் செயற்படுவதை உணர்ந்து, அதற்கேற்ற நெறிமுறைகளுடன் அந்நாட்டு அரசு நடந்து கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு தாங்கள் செய்து வரும் உதவிகள் தங்குதடையின்றி கிடைப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐ நா வின் தலைமைச் செயலரின் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக