9 ஜூலை, 2010

சில தினங்களில் போராட்டம் புஸ்வாணம் ஆகும்-ரவி கருணாநாயக்க

விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினரது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்டு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அஞ்சி விடப் போவதில்லை. அத்துடன் நிபுணர் குழுவை கலைத்து விடப் போவதுமில்லை. போராட்டம் இன்னும் சில தினங்களில் புஸ்வாணமாகி விடும். எனவே, இந்தப் பாராளுமன்றத்தை கேலிக் கூத்தாக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி எம். பி. ரவி கருணாநாயக்க நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் இங்கு தன்னிச்சையான முறையில் செயற்பட்டு வருகின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் மீது கும்பலுடன் சென்று தாக்குதல் நடத்துகின்றார். அவ்வலுவலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதத்தை நடத்துகிறார். இவ்வாறு அவர் நடந்து கொள்வதற்கு அரசாங்கத்தின் ஆதரவு இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. உண்மையில் அவரது செயற்பாட்டுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இல்லையெனில் இந்த அமைச்சர் பாராளுமன்றத்தையும் அதேநேரம் அமைச்சரவையையும் கேலிக்கூத்தாக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது.

வீரவன்சவின் குழுவினரது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பான் கீ மூன் அஞ்சி விடவும் மாட்டார். நிபுணர் குழுவை கலைத்து விடவும் மாட்டார். ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உண்ணா விரதம் இன்னும் சில தினங்களில் கைவிடப்பட்டு விடும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக