9 ஜூலை, 2010

உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும்-த.தே.கூ

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை உறுதியளித்தபடி மீளக்குடியேற்றுமாறும் உரிய அரசியல் தீர்வைக் காணுமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை நேற்று சந்தித்துப் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய உள்துரை அமைச்சர் பா. சிதம்பரம், நிதியமைச்சர் பிராணப் முகர்ஜி ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து பேசியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை இவர்கள் சந்தித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்காலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ். சுமந்திரன், ஆகியோரே நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது உறுதியளித்தபடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளக்குடியேற்றுமாறும் அரசியல் தீர்வை உரிய வகையில் காணுமாறும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று இவர்கள் கேட்டுள்ளனர்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் ஆகிவிட்ட போதிலும் அரசியல் தீர்வு காணப்படவில்லை. ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீள் குடியேற்றம் என்ற பெயரில் முகாம்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் மீண்டும் தற்காலிக முகாம்களில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தச் சந்திப்பில் எடுத்துக்கூறியுள்ளனர்.

இதேவேளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. ராஜாவையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன் போது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இந்தியா தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று கூட்டமைப்பு எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவது கவலை அளிக்கின்றது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்காக பாராளுமன்றத்திலும், வெளியிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும். குறிப்பாக முகாம்களில் வசிக்கும் மக்களை மீளக்குடியமர்த்தவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், ஏற்பாடு செய்யுமாறு நாம் இந்திய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சந்திப்பில் கருத்து தெரிவித்த டி. ராஜா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக