28 ஜூலை, 2010

வடக்கு, கிழக்கு புத்திஜீவிகளும் ஆய்வுகளில் ஈடுபடும் சூழல் பயங்கரவாத ஒழிப்பே காரணம் - ஜனாதிபதி


பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருப்பதன் பயனாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் புத்திஜீவிகளும் சுதந்திரமாக ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொழில் நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் கீழுள்ள தேசிய ஆராய்ச்சி சபை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வுக்கு இந்நாட்டில் உயர்ந்த மதிப்புள்ளது. இதனை யாவரும் அறிவர்.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்த இலங்கை ஆராய்ச்சியாளர்களும் இவ்வைபவத்தின் நிமித்தம் இங்கு வருகை தந்திருப்பதாக அறிகிறேன். இது இவ்வைபவத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. தாயகத்தின் மீது இவ்வாறு பற்றுக் கொண்டிருப்பவர்களை நாம் பாராட்டியாக வேண்டும். அதேநேரம் ஆய்வுகளை மேற்கொண்டு இன்று கெளரவம் பெறும் சகலருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இது அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் பாரிய பரிசோதனை என்றால் மிகையாகாது. முதலாவது பரிசோதனையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளிநாட்டிலிருந்து இங்கு வருகை தந்த கல்வியியலாளர் ஒருவர், இப்போது நாட்டின் உண்மையான சுதந்திரம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். இது எமக்கு ஒரு வகையில் பெருமையாகும்.

அறிவை தடைசெய்யவோ, மூழ்கடிக்கவோ முடியாது. இதனை நாமறிவோம். சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சிறந்த முறையில் உணர்ந்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள் தான் என நான் நம்புகிறேன். அறிவுத்துறையின் மேம்பாட்டுக்காக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றை சுதந்திரமாக வெளியிடுவதற்கும் உரிமை இருப்பது அவசியம் எனக் கருதுகின்றேன். இதற்கு இப்போது எமக்கு சுதந்திர சூழல் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

சுதந்திர இலங்கை மீது நாம் பாரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றோம். அதனை நிறைவேற்ற வேண்டியது பெரும் பொறுப்பாகும். சுதந்திர இலங்கையைக் கட்டியெழுப்பிய பின்னர் இந்நாட்டில் பிறக்கும் விஞ்ஞானிகளுக்கு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

சில ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக இருந்த நிறுவனங்கள் இப்போது ஆஸ்பத்திரிகளுக்கு அறிக்கைகள் வழங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளன. இருப்பினும் அந்நிறுவனங்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுடனேயே ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலைமை குறித்து நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க, தேசிய ஆராய்ச்சி சபைத் தலைவர் பேராசிரியர் எரிக்கருநாயக்கா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக