28 ஜூலை, 2010

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன், ஜூலை 27: மும்பை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கில் உறுதியான நடவடிக்கை எடுத்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை பாகிஸ்தான் உடனடியாகச் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தானுக்கு இவ்விதம் நெருக்குதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அடைக்கலமாகியுள்ள பயங்கரவாதிகளால் மனித சமுதாயத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட இன்னும் ஏராளமான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுப்பது அவசியம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதும், மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து நெருக்குதல் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹிலாரியும் நெருக்குதல்... சமீபத்தில் பாகிஸ்தான் வருகை தந்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், மும்பை தாக்குதல் விவகாரத்தை பாகிஸ்தான் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு பக்கபலமாக உள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அம்பலமாகியுள்ளது.

இதனால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது.

அல்-காய்தா, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஐஎஸ்ஐ-க்கும் தொடர்பிருப்பதாக இந்தியா பல தடவை குற்றம்சுமத்தியதை அமெரிக்கா முழுமையாக நம்பியிருக்க வாய்ப்பில்லை.

ஆனால் ஐஎஸ்ஐ-யின் செயல்பாடு குறித்து விக்கிலீக்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்ட தகவலால் இந்தியாவின் குற்றச்சாட்டு மீது அமெரிக்காவுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இதனால் பயங்கரவாதத்துக்கு எதிரான விஷயத்தில் பாகிஸ்தான் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கக்கூடாது என்ற ரீதியிலேயே அமெரிக்காவின் செயல்பாடு இனிமேல் அமையும்.

மும்பை தாக்குதல் விஷயத்தையும் அமெரிக்கா இனிமேல் முன்பைப் போல் அணுகாது. பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை அளிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக