29 ஜூலை, 2010

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாத்தவர் ஸ்ரீமாவோ ஜனாதிபதி


நாட்டையும் கட்சியையும் பாதுகாத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக் குவதே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு நாம் செய்யும் கெளரவமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சகலதையும் சவாலாக ஏற்று நாட்டையும் நாட்டின் வளங்களையும் பாதுகாத்தவர் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க. அதனைக் கொள்கையாகக் கொண்டே அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்ற ஐம்பதாவது ஞாபகார்த்த நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், 50 வருடங்களுக்கு முன் ஸ்ரீமாவோ இந்த நாட்டின் பிரதமராகவும் உலகின் முதலாவது பெண் பிரதமராகவும் திகழ்ந்தார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். அக்கட்சியைப் பாதுகாத்து பலப்படுத்தியது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவே. அந்த மகத்தான சேவையை என்றும் மறக்க முடியாது.

அவரது காலத்தில் அரச வளங்கள் பாதுகாக்கப்பட்டன. எமக்கான கோதுமை மா நிறுத்தப்பட்ட போதும் அவர் தாம் கொண்ட கொள்கையில் உறுதியாகவிருந்து அதற்கெதிராகப் போராடினார்.

இதனை முன்னுதாரணமாகக் கொண்டே நாமும் செயற்படுகிறோம். முழு உலகிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய போதும் அதனை எதிர்கொள்ளும் பலம் அவருக்கிருந்தது. அந்தப் பலமே எமக்கும் முன்னுதாரணமாகியது. நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்க அவர் எப்போதும் தயாராகவே இருந்தார்.

அரச வளங்கள் எதனையும் அவர் விற்கவில்லை. காப்புறுதிக் கூட்டுத்தாபனம், வங்கிகள் போன்றவற்றை பாதுகாத்ததுடன் பூகொட, துல்கிரிய, டயர் கூட்டுத்தாபனம் ஆகியன அவரது காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. கட்சிக்காக, நாட்டுக்காக அவர் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவிருந்தார். தமது கட்சியின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது போன்று ஏனைய கட்சிகளின் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தினார்.

இளைய பாராளுமன்ற உறுப்பினராக நான் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உறுதுணையாக அவர் இருந்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை, அவரை முன்னுதாரண மாகக் கொண்டு நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதுவே அவருக்கு நாம் செலு த்தும் கெளரவமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக