29 ஜூலை, 2010

’தமிழ்க் கட்சிகள் அரங்கம்’ 9 கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு:கூட்டமைப்பை அழைக்க முடிவு

ஒன்பது தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் அரங்கம் நேற்று புளொட் அலுவலகத்தில் கூடி ஆராய்ந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப் பினையும் தமிழ் கட்சிகள் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஒன்பது கட்சிகளினதும் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட கடிதமொன்றை கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பது குறித்து இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் எம். பி. சிவாஜிலிங்கம் தெரி வித்தார்.

புளொட் அலுவலகத்தில் நேற்று நண்பகல் ஒரு மணியள வில் ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்தது. உத்தியோக பூர்வமாக கடிதம் அனுப்பி வைப்பது மாத்திரமன்றி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம். பி. நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகள் அரங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து கடிதத்தின் பிரதியொன்றை அவரிடம் நேரடியாக கையளிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஸ்ரீ தரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன், ஈழ எதிரிகள் மறு வாழ்வுக் கழகத்தின் தலைவர் செ. சந்திரஹாசன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி, ஈ. பி. டி. பி. அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.

அமைப்பின் தலைவர் பத்மநாபா, டெலோ அமைப்பின் தலைவர் உதயராசா ஆகியோர் ஒன்பது பேரும் கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ கடிதமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட விருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பொதுவான தீர்வு எடுப்பது குறித்து ஆராயப்பட்டிருப்பதுடன் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மட்டக்களப்பில் காலை 10 மணிக்கு நடத்துவதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக