29 ஜூலை, 2010

அனுமதிப்பத்திரமின்றி முகவர் நிறுவனங்கள் 5 சட்டவிரோத வேலைவாய்ப்பு நிலையங்கள் முற்றுகை

அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை நடத்திச் சென்ற 5 சட்ட விரோத நிலையங்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட பரிசோதனை பிரிவின் முற்றுகைக்கு ஆளாகின.

நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான சட்ட விரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை சிலர் நடத்தி வருவதாக தமது அலுவலகத்துக்கு கிடைத்த தகவல்களையடுத்தே இவ்வாறான முற்றுகை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறியுள்ளார்.

ஹாலிஎல, நுவரெலிய வீதியில் இலக்கம் 174 இல் டிரான்ஸ் எயார் கல்ப் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த சட்ட விரோத வெளிநாட்டு வேலை முகவர் நிலையத்தில் இருந்து 99 கடவுச்சீட்டுகளுடன் ஒருவர்கைது செய்யப்பட்டார். பதுளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப் பட்டதையடுத்து அவருக்கு 05 இலட்சம் ரூபா சரீரப்பிணை விதிக்கப்பட்டது.

வெலிமடை பதுளை வீதி இலக்கம் 4 இல் டி.எம். கிப்ட் சென்டர் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத நிறுவனத்தில் இடம்பெற்ற முற்றுகையில் ஆவணங்களுடன் ஒருவர் கைது செய்யப் பட்டார். இவர் 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

மஹவ பிரதேசத்தில் நெலும்பத் வாவி வீதி அம்பன்பொல வடக்கில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டதுடன் பல ஆவணங்கள் பிடிபட்டன. அந்த நபர் 7 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்ச ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.

கொழும்பு மருதானை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்டுவந்த சட்ட விரோத நிறுவனம் முற்றுகையிடப் பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். கொழும்பு மாளிகாவத்தை போதிராஜ மாவத்தை இலக்கம் 765/142 என்ற இலகத்தில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத முகவர் நிலையத்தில்ஒரு நபரும் ஆவணங்களும் கிடைத்தன.

மருதானை மஹிந்த ஹிமி மாவத்தை 93/1/1 என்ற இலக்கத்தில் நடத்தப்பட்டுவந்த சட்ட விரோத முகவர் நிலையம் முற்றுகையிடப்பட்டபோது 8 கடவுச் சீட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாளிகாகந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு 20 ஆயிரம் ரூபா சரீரப்பிணை விதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக