14 மே, 2010

நல்லிணக்க குழுவின் ப+ர்வாங்க பணிகளுக்கு ரூ.10மில்லியன் ஒதுக்கீடு

ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
பயங்கரவாதம் நிலவிய காலகட்டத்தில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஆராயவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்டதற்கமைய சகல இனங்களையும் கொண்டதாகவும் பல் கலாசாரத்தையும் பிரதிபலிப்பதாகவும் எழுவர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்படவுள்ளது.

இந்தக் குழு செயற்படுவதற்கெனத் தனியான செயலகமொன்று ஸ்தாபிக்கப்படும். செயலாளர் நாயகமொருவரை ஜனாதிபதி நியமிப்பதுடன் செயலகத்தின் செலவினங்களுக்காக ஆரம்ப கட்டமாக பத்து மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்கிறார்.

பயங்கரவாதம் உருவானதற்கான காரணங்களைக் கண்டறிந்து அது மீண்டும் தலைதூக்காதிருப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் செயல்பாடுகளைப் பரிந்துரைப்பதுடன், பயங்கரவாதம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது பற்றியும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை தொடர்பாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர், தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தகவல் தருகையில், சமாதானம், அபிவிருத்தி ஆகிய கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நிபுணர்கள் குழு செயற்படும் எனத் தெரிவித்தார்.

குழு தொடர்பான முழுமையான தகவல்களை அடுத்த வாரம் அறிவிப்பதாகக் கூறிய அமைச்சர் ரம்புக்வெல்ல, பயங்கரவாதம் ஏற்படுவதற்கான மூல காரணத்தைக் கண்டறியவும் அதனை மீண்டும் தலையெடுக்காதிருக்க அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் இந்தக் குழு பரிந்துரை செய்யும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, விடயங்களை ஆராயவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சொந்தப் பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதாக கடந்த 2009 ஜுன் 05 ஆந் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில், இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி குறிப்பிட்டதைப் போல் இந்த நிபுணர்கள் குழு நியமிக்கப்படுகிறது.

யாதீனமாக செயற்படும் இந்தக் குழு 2002 பெப்ரவரி 21 ஆந் திகதிக்கும் 2009 மே 19 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்யும்.

விசேடமாக போர் நிறுத்த உடன்படிக்கையின் தோல்வி அதற்குப் பின்னர் 2009 மே 19 வரையிலான காலம் வரை இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றியும் ஆராயும் இந்தக் குழு, இதில் எந்தவொரு தனி நபரோ குழுவோ, அமைப்போ நேரடியாகவோ அல்லது மறைமுகமாக சம்பந்தப்பட்டிருந்தால் அது பற்றியும் மீண்டும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்வது பற்றியும் கண்டறியும் என்றும் அமைச்சரவை பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக