12 ஏப்ரல், 2010

பொன்சேகாவின் புது அவதாரம்



:
: இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, அரசியல்வாதியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிட்டு பொன்சேகா தோல்வியடைந்தார்.

இந்நிலையில் பிப்ரவரி மாதம், அவர் கைது செய்யப்பட்டார். அரசுக்கு எதிராக சதி செய்தது, பதவியில் இருக்கும்போதே அரசியலில் ஈடுபட்டது, விதிகளை மீறி ஆயுதங்களை வாங்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

அவர் மீது ராணுவ நீதிமன்ற விசாரணையும் நடந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியிலிருந்து பொன்சேகா, ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிட்டார். அவருக்குப் பதிலாக பொன்சேகாவின் மனைவி அனோமா, தேர்தல் பிரசாரம் செய்தார். தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. அப்போது மொத்தம் 98,458 வாக்குகள் பெற்று பொன்சேகா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,10,683 என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்சேகாவுடன் சேர்த்து ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இலங்கை தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும், எந்த ஒரு வேட்பாளரும் பெறாத அளவுக்கு அதிக சதவீத வாக்குகளை பொன்சேகா பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி அனோமா கூறியதாவது: பொன்சேகாவுக்கு கிடைத்த வெற்றி அவருக்கு நல்ல செய்தியாக இருக்கும். அதே நேரத்தில் அரசுக்கு எதிராக மக்கள் கொடுத்த வெற்றியாகும் இது. வெற்றிச் செய்தியை சொன்னதும் அமைதியான புன்னகை மட்டுமே பூத்தார் பொன்சேகா.

அதேபோல புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றபோதும் லேசான புன்னகையுடன் தனது மகிழ்ச்சியை அவர் நிறுத்திக் கொண்டார்.

தேர்தலின்போது எனது கணவருக்கு நான் செய்த பணி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவேன். எனது கணவருக்காக நான் செய்யும் விஷயங்களை இனி அதிகாரிகள் தடுக்க முடியாது.

ஓட்டு எண்ணிக்கையின்போது நான் அந்த வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தேன். அப்போது சில அரசியல்வாதிகள் வாக்கு எண்ணுவதில் தில்லுமுல்லு செய்ய பார்த்தனர். ஆனால் போலீஸ் அதிகாரிகளும், தேர்தல் அலுவலர்களும் தலையிட்டு எனக்கு உதவி செய்தனர் என்றார் அவர்.

இத்தகவலை சன்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. வரும் 22-ம் தேதி புதிய நாடாளுமன்றத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் பொன்சேகாவும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனது கணவர் கலந்துகொள்ளும் போது அணியும் ஆடைகளை அனோமா முன்னதாகவே தேர்வு செய்து வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக