12 ஏப்ரல், 2010

வாக்களித்த அனைவருக்கும் ரிஷாட் பதியுதீன் நன்றி தெரிவிப்பு

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமிழ்,முஸ்லிம் சிங்கள மக்கள் இனத்துவத்துவக்கு அப்பால் மனிதத்துவத்துக்கு முன்னுரிமையளித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த இரு பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்துள்ளமைக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளார் ரிஷாட் பதியுதீன்.

வன்னி மாவட்டத்தில் மூன்று சமூகத்தினதும் தேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் இதன் போது அவர் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வன்னி மாவட்ட மக்களது தேவைகள் எண்ணிலடங்கா. அவற்றை நிறைவு செய்து கொள்ள எதிர்க்கட்சி அரசியல் எவ்விதத்திலும் பொறுத்தமில்லை என்பதை தெளிவாக விளக்கப்படுத்தியிருந்தோம்.அவற்றை ஏற்றுக் கொண்ட,நியாயம் என்று கண்ட எமது வாக்காளர்கள்,வாக்களித்துள்ளனர்.

இவர்கள் அளித்த வாக்குகள் மூலம்,வன்னி மாவட்டத்தில் எமக்கு வாக்களிக்காதவர்களும் நன்மையடையப் போகின்றார்கள்.இது எம்மை வெற்றி பெறச் செய்த தமிழ்,முஸ்லிம்.சிங்கள வாக்காளர்களின் முன்மாதரியான செயற்பாடாகும்.

ஆனால் எம்மை தோற்கடித்து வன்னி மாவட்டத்தில் வாழும் மக்கள் எதையும் அனுபவிக்கக் கூடாது என்று கங்கணம் கட்டியவர்களும் எதிர்க்கட்சியில் தோன்றியுள்ளார்கள்.இவர்களால் எதையும் மக்களுக்குச் செய்ய முடியாது.

இந்த தேர்தலின் பின்னரான அபிவிருத்தி செயற்பாடுகளை நாம் திட்டுமிட்ட முறையில் முன்னெடுக்கவுள்ளோம்.அனைத்து கிராமங்களும் எவ்வித பாகுபாடுகளுமின்றி அபிவிருத்தி செய்யப்படும்.

எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றுவோம்.போலி,பொய்,ஏமாற்று பிரசாரங்களுக்கு சோரம் போகாத வன்னி மாவட்ட மூவின சமூகத்துக்கும் எனது நன்றியினை தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் வன்னி மாவட்டம் இன ஒற்றுமைக்கு முன்னுதாரணமான மாவட்டமாகும்" என்றும் கூறினார். அதேவேளை தன்னுடன் போட்டியிட்ட சகோதர வேட்பாளர்கள் அனைவரின் பங்களிப்பை ஒரு போதும் மறக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக