12 ஏப்ரல், 2010

தேர்தல் வெற்றி குறித்து தொழிலாளர் தேசிய முன்னணியின் கருத்து

தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடைபெற்ற தினம் வரை அனைத்து நாட்களிலும் அராஜகமும் வன்முறையும் கட்டவிழ்த்துவிடப்பட்டபோதும் ஐக்கிய தேசிய கட்சியின் அதிகூடிய விருப்பு வாக்குகளை வழங்கி எமது தலைவர் திகாம்பரம் அவர்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்துள்ள நுவரெலியா மாவட்ட மக்களுக்கு தொழிலாளர் தேசிய முன்னணி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் திலக்ராஜ் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து தொழிலாளர் தேசிய முன்னணி விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவத்திருப்பதாவது,

"நடைபெற்று முடிந்த தேர்தலில் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதே எமது நோக்கமாக இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் பொருட்டு தேவையற்ற விதத்தில் மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் எல்லாம் நாம் வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை சிதறடிக்காது நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் எமது வேட்பாளர்களை களமிறக்கியிருந்தோம்.

எமது பிரதித் தலைவரின் வெற்றி சூட்சுமமான முறையில் தட்டிப்பறிக்கப்பட்டாலும் எமது தலைவரின் வெற்றி தொழிலாளர் தேசிய முன்னணிக்கும் மலையகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்களுக்கும் கிடைத்த கௌரவமாகவே நாம் பார்க்கிறோம்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் 40 வருடகால தொழிற்சங்க வரலாற்றில் தற்போதைய தலைவர் திகாம்பரம் சங்கத்தை பொறுப்பேற்று நான்கு வருடங்களுக்கு உள்ளாகவே நாடாளுமன்றத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் குரல் ஒலிக்கவிருப்பது உண்மையான உழைப்பாளர் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

முன்னாள் மலையக அமைச்சர்கள் பலரும் தம்மை தேசிய தலைவர்கள் என தாமாக அறிவித்துக்கொண்டோரும் தோல்வியடைந்து நிற்கையில், கடந்த நாடாளுமன்றத்தில் இருந்து இந்த நாடாளுமன்றத்தில் தமது பிரதிநிதிகளை குறைத்துக்கொண்டுள்ள தலைமைக்கும் மத்தியில் புதிதாக கட்சியையும் பொறுப்பேற்று நாடாளுமன்றம் வரை அதனை அழைத்துச்சென்றிருக்கும் தலைவர் திகாம்பரத்தின் தலைமை மலையக மக்கள் வேண்டிநின்றதாகும்.அதேவேளை எமது பிரதித் தலைவர் ஐக்கிய தேசிய பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் வாக்குக்கணக்கிட்டு அறிவிக்கப்பட்ட முறை சட்ட முரணானது மரபு கடந்தது என எமது அதிருப்தியை தேர்தல் ஆணையாளருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பீடத்துக்கும் நாம் உடனடியாகவே அறிவித்திருக்கிறோம். தேர்தல் கால அத்துமீறல்கள் குறித்து மக்கள் நன்கு அறிவர்.

திட்டமிட்ட அடிப்படையில் வெற்றிகள் தீர்மானிக்கப்படும் சூழ்நிலையில் எமது பிரதித்தலைவரின் வெற்றி அதற்கு இரையாக்கப்பட்டுள்ளது என்பதை எமது ஆதரவாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனினும் எமது அரசியல் பயணம் எவ்வித தடையுமின்றி தொடரும்.எமது அரசியல் உயர்பீடம் விரைவில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும்.

தேர்தல் காலங்களில் எமது கட்சி நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ,எமது ஆதரவாளர்கள் மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு வீதத்தை பெருமளவில் குறைத்துள்ளது.

ஹங்குராங்கத்தை பகுதியில் பல வாக்களிப்பு நிலையங்களில் எமது வாக்காளர்கள் வாக்களிக்க முடியாதவாறு தடைவிதித்து அச்சுறுத்தியுள்ளார்கள். பூண்டுலோயா டன்சினன் தோட்ட வாக்குச் சாவடிக்கு அருகாமையில் எமது ஆதரவாளர் நேரடியாக ஒரு மாகாண சபை உறுப்பினரால் துப்பாக்கிமுனையில் வைத்து இரும்பு கம்பியால் தாக்கப்பட்டுள்ளார்.

றம்பொடை பகுதியில் தினம் தினம் எம்மீது வன்முறைகள் கட்டவிழ்துவிடப்பட்டன. எமது ஆதரவாளர் தாக்கப்பட்டு வாகனங்கள் சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டன. பிரசாரத்தில் ஈடுபட்ட எமது ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.ஆனாலும் எமது வெற்றியை அவர்களால் தடுக்க முடியவில்லை. எமக்கு வாக்களித்த அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவத்துக்கொள்கின்றோம்.

எமது மாவட்டத்தில் எம்மோடு தெரிவு செய்யப்பட்ட ஏனைய பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது வாழத்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு எமது பட்டியலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கும் நண்பர் ஸ்ரீ ரங்கா அவர்களிடத்திலும் அதிகபட்ச சேவையையும், உயர்ந்த பட்ச சம்பளத்தையும், மலையக மக்களின் தொழிற்சங்க அரசியல் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள மலையக மக்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக