12 ஏப்ரல், 2010

சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட அழைக்கின்றார் சம்பந்தன்





தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

"வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன. எமக்கு எதிராக பல்வேறு அரசியற்கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களத்தில் குதித்திருந்தன. எனினும் எம்மால் வெற்றி பெற முடிந்தது.

எனவே தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து செயற்படசிகீ தயங்க மாட்டோம் அந்த வகையில் அவர்களும் சிந்திக்க வேண்டும் என்று மிக வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்ப் பேசும் மக்களின் நலன்கருதி இது அத்தியாவசியமான தேவை என்பதை வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகளின்படி தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளாக எம்மை தெரிவு செய்திருக்கிறார்கள். நாம் எல்லோரும் தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி ஒன்றாக செயற்படுவோம்.

தமிழ்க் கிராமங்களில் குண்டர்களின் அட்டகாசத்தால் தமிழ் மக்கள் சுயாதீனமாக வாக்களிக்க முடியாத நிலை தோன்றியது. சலப்பையாறு, கும்புறுப்பிட்டி, குச்சவெளி, தம்பலகாமம், சாம்பல்தீவு, ஆத்திமோட்டை ஆகிய பகுதிகளிலேயே இச்சம்பவங்கள் அதிகரித்திருந்தன.

கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்தில் மீள வாக்களிப்பை நடத்த திணைக்களம் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.

கும்புறுப்பிட்டி மட்டுமல்ல வேறுபல இடங்களில் இவ்விதமான முறைகேடுகள் இடம்பெற்றன. குறித்த கிராமத்தில் வாக்குகள் மூலம் பெரிய மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. சுமார் ஆயிரம் வாக்குகளே அங்குள்ளன. இருப்பினும் இதனை நடத்துவதனூடாக முறைகேடு ஆதாரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

அதேவேளை, முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து எதிர்கால அரசியல் நகர்வுகள் இடம்பெறுமா என்று கேட்ட போது,

"அக்கட்சிகளின் தலைமைகளுடன் விரைவில் கலந்து பேசி இது தொடர்பாக முடிவெடுக்கப்படும். பெரும்பாலும் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான ஒரு கூட்டணியை ஏற்படுத்தும் எண்ணம் இருக்கிறது. இதுபற்றி விரைவில் அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக