25 ஏப்ரல், 2010

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தை மீண்டும் பெறுவது முற்றிலும் இலங்கையின் கைகளிலேயே தங்கியுள்ளது



ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தை மீண்டும் பெறுவது முற்றிலும் இலங்கையின் கைகளிலேயே தங்கியுள்ளது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் செவேஜ் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் அதி.வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் உடகம ஸ்ரீ புத்தரகித்த தேரர் ஆகியோரை சந்தித்து உரையாடிய பின்னரே பேர்னாட் செவோஜ் செய்தியாளர்களிடம் மேற்படி கருத்துகளை தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகத்தின் தலைவர் ஒருவர் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

""இந்நாட்டின் மனித உரிமை நிலைவரத்திலேயே எப்போதும் எமது நிலைப்பாடு தங்கியுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக நாம் எமது கவலைகளை வெளியிட்டுவந்தோம். ஆனால் அரசாங்கத் தரப்பிலிருந்து பதில் எதுவும் வரவில்லை. நிலைமை முன்னேற்றமடையும்போது எமது நிலைப்பாட்டை மீளாய்வு செய்வோம்.

ஐ.நா. வின் மனித உரிமை பிரகடனங்கள் மூன்றை அமுல்படுத்துவதில் இலங்கை குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்பதை ஐரோப்பிய ஆணைக்குழு நடத்திய விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வாபஸ் பெறத் தீர்மானித்தோம்'' எனவும் அவர் கூறினார்.

இச்சந்திப்பின்போது மல்வத்தை பீட மகாநாயக்க தேரர் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மீளிணக்கச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்வதற்கான தருணம் இது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்படுகின்றன என நான் நம்புகிறேன் எனத் தெரிவித்தார். அஸ்கிரிய பீட மகா நாயக்க தேரர் கருத்துத் தெரிவிக்கையில் பூகோள ரீதியான சகோதரத்துவத்தில் நாம் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளோம். இந்நாட்டின் மக்கள் உலகின் ஏனைய பகுதியினருடன் இணைந்து வாழவும் செயற்படவும் வேண்டியுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரை நாம் வெகுவாக வரவேற்கிறோம் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக