முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு பஸ் ஓட்டுநர், நடத்துநர் பயிற்சியை இலங்கை அரசு வழங்கவுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இலங்கை ராணுவத்துக்கு எதிராக ஏராளமானோர் பணிபுரிந்து வந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இலங்கை அரசிடம் சரணடைந்த புலிகள், மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. போரால் இடம்பெயர்ந்த பொதுமக்களை மீண்டும் அவர்களது இடத்திலேயே மறுகுடியேற்றம் செய்யும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் முன்னாள் விடுதலைப்புலிகள் 100 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிரி கூறியதாவது:
மறுவாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 100 முன்னாள் விடுதலைப் புலிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ஓட்டுநர், நடத்துநர் பயிற்சிகளை வழங்கவுள்ளோம்.
பயிற்சி பெற்ற பின்னர் இலங்கையின் வடக்குப் பகுதியிலுள்ள அரசு பஸ் போக்குவரத்துக் கழகத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். கல்வித் தகுதி, திறமை அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவர். முன்னாள் விடுதலைப்புலிகள் தற்போது நிம்மதியான வாழக்கையைப் பெறுவதற்காக இந்த திட்டத்தைத் தொடங்கவுள்ளோம். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு முகாம்களில் இருந்து இதுவரை 31 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சன் 2010 என்ற பெயரில் ஆண்டுதோறும் சூர்ய மாங்கல்யா அல்லது புதுவருட களியாடம் என்ற பெயரில் சிங்களப் புத்தாண்டு விழா நடைபெறும். இந்த ஆண்டும் அந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
இதே தினத்தில் தான் இந்துக்களின் புத்தாண்டும் இங்கு கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 14-ம் தேதி நடந்த இந்த புத்தாண்டு விழாவில் முன்னாள் விடுதலைப்புலிகள் 31 பேரும், அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதில் 9 ஆண்கள், 3 பெண்கள் மீண்டும் தங்களது பள்ளிக் கல்வியைத் தொடர்வதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் 2 பெண்கள் தங்களது பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான உதவியை இலங்கை அரசு செய்யும் என்று நாங்கள் உறுதி அளித்துள்ளோம் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக