25 ஏப்ரல், 2010

சென்னையில் மோசடி: நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த தனிப்படை பெங்களூர் விரைந்தது



சென்னையில் மோசடி: நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த தனிப்படை பெங்களூர் விரைந்தது; பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள்


திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து பிரபலமானார். அவரது காந்தப் பேச்சில் மயங்கி ஏராளமான பக்தர்கள் அவரது சீடர்களாக மாறினர்.

தமிழகம் முழுவதும், நித்யானந்தாவின் ஆசிரமங்கள் பிரபலமடைந்தன. அவரது தரிசனத்துக்காக பக்தர்கள் காத்துக்கிடந்தனர். இப்படி புகழின் உச்சியில் இருந்த நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்யானந்தா மீது ஏராளமான வக்கீல்கள் புகார் கொடுத்தனர். அங்கயற்கண்ணி என்ற பெண் வக்கீல் கொடுத்த புகாரில், நித்யானந்தா சாமியார் வேஷமிட்டு பக்தர்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி யிருந்தார்.

இந்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது (420-ஐ.பி.சி.) மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் மோசடி வழக்கு தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. நித்யானந்தாவை சென்னைக்கு அழைத்து வரமாட்டோம். உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று விசாரணை நடத்துவார்கள் என்று கமிஷனர் ராஜேந்திரன் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படையினர் நேற்று இரவு பெங்களூர் புறப்பட்டு சென்றனர்.

கர்நாடக போலீஸ் காவலில் இருக்கும் நித்யானந்தாவிடம் மோசடி தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சென்னைக்கு வரும் நேரங்களில் பாத பூஜை என்ற பெயரில் நித்யானந்தா பல கோடிகளை சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். யார்- யாரிடம் நித்யானந்தா எவ்வளவு பணம் வாங்கினார் என்ற பட்டியலை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

கோடிகளில் புரளும் குடும்பத்து பெண்கள் பலர் நித்யானந்தாவுக்கு பாதபூஜை நடத்துவதை பெரும் பாக்கியமாக கருதி அவரது கால்களை கழுவி விட்டுள்ளனர்.

தங்களது வீட்டுக்கு நித்யானந்தாவை வரவழைத்து பெரிய தாம்பூலத்தில் அவரை நிற்க வைத்து பாதபூஜை செய்துள்ளனர். இந்த பாத பூஜைக்காக பல கோடிகளை நித்யானந்தா பக்தர்களிடம் இருந்து வசூலித்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் விருப்பப்பட்டு காணிக்கையாக நினைத்துதான் பல லட்சங்களை வாரி வழங்கியுள்ளனர்.

நித்யானந்தா மிரட்டி பணம் வசூலித்தார் என இதுவரை யாரும் சென்னையில் புகார் கொடுக்காததை இந்த வழக்கின் பின்னடைவாக போலீசார் கருதுகிறார்கள். இருப்பினும் மோசடி தொடர்பாக பல்வேறு தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக